தமிழகம்

பெற்றோரை துன்புறுத்திய மகனுக்கு அதிரடி உத்தரவு..! திருப்பூரில் பரபரப்பு

பெற்றோரை துன்புறுத்தும் பிள்ளைகள் என்ற செய்திகள் சமீபகாலமாக அதிகமாக வலம்வர தொடங்கியுள்ளன. இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றமும் வயதான காலத்தில் பெற்றோரை துன்புறுத்தும் பிள்ளைகளை கண்டித்து, பெற்றோர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்ததோடு அவர்கள் வாழும் காலம் வரை சொத்துக்களை அனுபவித்துக் கொள்ளலாம், அதன் பிறகு பிள்ளைகள் சொத்துக்களை அனுபவித்துக் கொள்ளலாம் என்று பல்வேறு காலகட்டங்களில் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் குமர லிங்கபுரத்தை சேர்ந்தவர்கள் குருசாமி , பெரியக்கா தம்பதியர். இவர்களது மகன் மாரிமுத்து மருமகள் புனிதா. தனது மகனும்,மருமகளும் தனக்குச் சொந்தமான வீட்டை அபகரித்துக் கொண்டு வயதான காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றி, துன்புறுத்துவதாக உடுமலை கோட்டாட்சியரிடம் தனக்கு சொந்தமான வீட்டை மீட்டு தருமாறு மாரிமுத்துவின் தந்தை குருசாமி புகார் மனு அளித்துள்ளார்.

மனுவை விசாரித்த கோட்டாட்சியர் 12 .11.2020 அன்று மாரிமுத்து தனது தாய், தந்தையருக்கு ஜீவனாம்சம் தொகையாக மாதம் ரூபாய் 2000/- அவரது தந்தை குருசாமியின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் . ஆனால் இன்றைய தேதி வரை எந்த ஒரு ஜீவனாம்ச தொகையையும் வழங்காததால் மன உளைச்சலுக்கு ஆளான குருசாமி, திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் தனக்குச் சொந்தமான வீட்டை மீட்டு தரக்கோரி பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம்- 2007-ன் படி தனது புகாரை மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் வினித் கோட்டாட்சியர் ஏற்கனவே வழங்கிய உத்தரவை ரத்து செய்து 60 நாட்களுக்குள் மாரிமுத்து வீட்டை காலி செய்து மனுதாரர் குருசாமியிடம் ஒப்படைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் பெற்றோரிடம் சொத்தை அபகரித்துக் கொண்டு வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காமல் விடும் மகன், மருமகள்,மகளுக்கு பாடம் கற்றுத் தரும் வகையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அமைந்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரின் இந்த செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாகவும் பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

– கார்வேந்தன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button