தமிழகம்

சிறுகுறு தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் மாநிலம் முன்னேறும் : அமைச்சர் எம்.சி.சம்பத்

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கோவையில் கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான வகுப்புகள் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளன. அரசூர் அருகே ஜி.கே.டி. தொழில்நுட்ப வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வகுப்புகளை தொடங்கி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் : கோவையில் ராணுவ தொழிற்பேட்டை தாழ்வாரம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் கோவையில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை பூங்கா பாதுகாப்புத்துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.
இந்த தொழிற்பூங்கா அமைக்க கோவை அருகே 300 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூரில் சிப்காட் தொழிற்சாலை பூங்காவை அமைக்க அங்கு 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும்.

பெருந்துறையில் உள்ள தொழிற்சாலை பூங்கா பெரும்பாலும் நிரம்பிவிட்டதால், புதிதாக இந்த தொழிற்சாலை பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
மேலும் கோயம்பத்தூர், கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகியவற்றை இணைக்கும் மேற்கு தொழிற்பேட்டை தாழ்வாரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை – கன்னியாக்குமரி மற்றும் சென்னை- பெங்களூரு தாழ்வாரத்துடன் இந்த திட்டமும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.சி சம்பத் தெரிவித்தார்.
உலகளவில் விண்வெளித்துறையில் பணியாற்றும் 30 சதவீத பொறியாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் எம்.சி சம்பத் கூறினார்.

கார் விற்பனை சரிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எம்.சி சம்பத் ‘‘தேசிய அளவில் விற்பனை குறைந்ததால், வாகன உற்பத்தி துறையில் மந்தநிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் கூறினார். வாகன உற்பத்தித் துறையில் தொழில்நுட்ப‌ம் மாறியதும், மீண்டும் பழையபடி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற இரண்டு நாள் சிறு, குறுந்தொழில்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது: தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக தென்மாவட்டங்களில் ஸ்பிக், ராம்கோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, புதிய தொழில் திட்டங்களை தென்மாவட்டங்களில் தொடங்குமாறு முதலீட்டாளர்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மதுரை – தூத்துக்குடி தொழில் வழிச் சாலைத் திட்டம் தற்போது சென்னை – கன்னியாகுமரி தொழில் வழிச் சாலை மேம்பாட்டுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத் திட்டம் 2 பிரிவுகளாக செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த தொழில் வழிச்சாலையில் அமையும் 21 மாவட்டங்கள் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத் திட்டத்துக்கு நிதியுதவி பெறுவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்னும் ஓராண்டில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அவ்வாறு புதிய தொழில்கள் தொடங்கப்படும் போது இந்த தொழில் வழிச் சாலையில் அமைந்துள்ள பகுதிகள் தொழில் கேந்திரங்களாக உருவாகும். தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், 12 ஆயிரம் சிறுகுறு நிறுவனங்களுக்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button