Featuredதமிழகம்தமிழகம்

“எனது கணவரை ஆணவக் கொலை செய்து விட்டார்கள்…”இளம்பெண் பரபரப்பு புகார்

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் இல்லாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மீண்டும் சட்ட விரோத செயல்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொண்ட தம்பதிகள் ஆணவக் கொலை செய்யப்படுவதை தடுக்க அரசும் காவல்துறையும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சாதி வெறி பிடித்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆணவக் கொலை செய்வதை இன்னும் நிறுத்தவில்லை என்பதைத்தான் கடந்த வாரம் கும்மிடிப்பூண்டியில் நடந்த சம்பவம் உணர்த்துகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே காரணி கிராமத்தைச் சேர்ந்த கௌதம் என்பவரும் அயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அமுலு என்ற பெண்ணும் சென்னைக்கு வேலைக்குச் செல்லும்போது இரயிலில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலர்களாக சுற்றித்திரிந்திருக்கிறார்கள். இவர்களின் காதலை தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்து திருமணம் செய்து வைக்குமாறும் கூறியிருக்கிறார்கள். கௌதமின் பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கௌதமும், அமுலுவும் கடந்த இரண்டாண்டுக்கு முன்பு சென்னையில் பதிவுத்திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள். கௌதம் செல்போன் மெக்கானிக்காகவும், அமுலு தனியார் மருத்துவமனையில் நர்சாகவும், பணிபுரிந்து சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் வார இறுதி நாட்களில் கௌதம் தனது தாயாரையும், அமுலு தனது சகோதரியையும் பார்ப்பதற்காக தனது கிராமத்திற்கு சென்று வந்துள்ளனர். நாளடைவில் அமுலு கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக தனது சகோதரி வீட்டிற்குச் சென்று குழந்தையையும் பெற்றெடுத்து இருவரும் அங்கேயே தங்கியுள்ளனர்.

கடந்த வாரம் கௌதமின் தாத்தா இறந்து விட்டதாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். மாலையில் தனது கணவர் வீடு திரும்பாததால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது வீட்டில் பிரச்சனை என்று பதட்டத்துடன் மனைவியிடம் பேசியிருக்கிறார். இதன்பிறகு அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டது தெரிந்ததும் தனது சகோதரனை கௌதமின் கிராமத்திற்கு அனுப்பி விசாரித்த போது கௌதம் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை அடக்கம் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த அமுலு கௌதமின் சொந்த ஊரான கிராமணி கிராமத்திற்குச் சென்று தனது உறவினர்களுடன் சென்று கௌதமின் உறவினர்களிடம் விசாரித்த போது, கௌதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அவனை இரவே தகனம் செய்து விட்டோம் என்று அமுலுவின் தந்தையிடம் அலட்சியமாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கௌதமின் மனைவி அமுலுவும் அவரது உறவினர்களும் அதிர்ச்சியடைந்து கதறி அழுத நிலையில் கௌதமின் பெற்றோரிடம் எனது மகளுக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி உடலை தகனம் செய்யலாம் என்று அமுலுவின் தந்தையிடம் முறையிட்ட போது கௌதம் குடும்பத்தினர் அலட்சியமாக பேசி விரட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

இதனால் இறந்து போன கௌதமின் மனைவி ஆரணி காவல் நிலையத்தில் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனக்குத் தகவல் தெரிவிக்காமல் எனது கணவரின் உடலை தகனம் செய்து விட்டதாகவும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதை தாங்க முடியாத கௌதமின் பெற்றோர் தனது மகனை ஆணவக் கொலை செய்து எரித்து விட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் அறிவியல் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்தாலும், ஆணும், பெண்ணும் தங்களுக்குப் பிடித்தவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு இந்தச் சமூகம் இடமளிப்பதில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் கௌதமை ஆணவக் கொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனையும், தனது கணவனை இழந்து குழந்தையுடன் தவிக்கும் பெண்ணிற்கு நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button