பல்லடத்தை அதிர வைத்த மோசடி வழக்கு… : நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவது ஏன்?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சமீப காலமாக அதிர வைத்த மோசடி வழக்கும் போலீசாரின் செயல்பாடுகளும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிவக்குமார், அவரது சகோதரர் விஜயகுமார், சகோதரரின் மகன் ராகுல் பாலாஜி, அழகு நிலையம் நடத்திவந்த பிரவினா ஆகியோர் கோவை திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த அப்பாவிகளை குறி வைத்து கோடிக்கணக்கில் நூதன முறையில் மோசடி செய்து தப்பி ஓடி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசடியின் மூளையாக செயல்பட்ட சிவக்குமார் முதலில் சொத்துகளை வைத்து கடன் தேவைப்படுவோரின் விபரங்களை தரகர்கள் மூலம் தெரிந்துகொண்டு தொழில் துவங்கி பார்ட்னர்களாக்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி ஆசை வார்த்தை கூறி தனது வலையில் விழவைத்துவிடுவது வழக்கம். பின்னர் தனக்கு தெரிந்த நபர்களை வைத்து பதிவில்லா பங்குதாரர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டு அவர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே வங்கிக்கணக்கில் இருந்து கடனாக பெற்ற தொகையை வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றி மோசடியாக பணத்தை அபகரித்துவிட்டு பின்னர் ஒரு தவணை கூட செலுத்தாமல் ஏமாற்றிவிடுவாராம்.
சொத்துப்பத்திரத்தை கொடுத்தவர்கள் மாதா மாதம் பங்குப்பணம் கொட்டும் என எதிர்பார்த்து காத்திருந்தால் கடைசியில் வங்கி ஜப்தி நோட்டீஸ் வந்த பிறகு தான் தாங்கள் மோசடி செய்யப்பட்ட விபரமே தெரிய வரும். பின்னர் சிவக்குமாரை தேடினால் எஸ்கேப் தான். மோசடி மன்னன் சிவக்குமாரின் பின்னனி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்ப கால கட்டத்தில் பல்லடம் அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளர் ஒருவரின் துணையுடன் இது போன்ற மோசடி வேலையை துவங்கியபோது மேலாளரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொண்ட வங்கி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது. பின்னர் கோவையில் பிரமாண்டமாக அலுவலகத்தை துவங்கிய சிவக்குமாருக்கு பல்லடத்தை சேர்ந்த அழகு நிலைய பெண் பிரவினாவின் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் பிரவினாவை பயன்படுத்தி பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த கோவையை சேர்ந்த குமரேசன் என்பவரிடம் சொத்துப்பத்திரத்தை பெற்று மோசடியாக ரூபாய் 2 கோடியும், திருப்பூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் 4 கோடியே 43 லட்சத்து 15 ஆயிரத்து 528 ரூபாயும், கோவையை சேர்ந்த சத்யமூர்த்தி என்பவரிடம் 55 லட்சமும், ஊத்துகுளியை சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் 1 கோடியே 75 லட்சமும், ஊத்துகுளியை சேர்ந்த சந்திரகலா என்பவரிடம் 1 கோடியே 50 லட்சமும், திருப்பூர் ரத்தினசாமி என்பவரிடம் கோடிக்கணக்கு மதிப்பிலான பத்திரம் மற்றும் ரொக்கம் ரூ. 10 லட்சத்து 75 ஆயிரமும் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள மோசடியில் குமரேசன் மற்றும் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரேசனின் புகாரின் பேரில் சிவக்குமார் மற்றும் பிரவினாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த இருவரும் தன்னை மிரட்டுவதாக குமரேசன் நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின் பேரில் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் பிரவினா மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சத்தியமூர்த்தி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவக்குமார், விஜகுமார், ராகுல் பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் திருப்பூர் ரத்தினசாமி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊத்துகுளியை சேர்ந்த பெரியசாமி, சந்திரகலா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பிரவினா, சிவக்குமார், விஜயகுமார், ராகுல்பாலாஜி, சரவணன் ஆகியோரை தேடிவருவதோடு சம்பந்தப்பட்டவர்களின் வீட்டின் கதவுகளில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் திருப்பூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சிவக்குமார், ஆடிட்டர் சரவணன், ஜெகநாதன், விஜயகுமார், ராகுல்பாலாஜி, பிரபு, வங்கி மேலாளர் மதன் மோகன் ஆகிய 7 பேர் மீது திருப்பூர் மாநகர காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது கடந்த பல மாதங்களாக பல்லடம் காவல் நிலையத்திற்கு வந்து காத்திருந்து புகார் மனு அளித்தும் காலதாமதமாக நடவடிக்கை எடுப்பதாக வேதனை தெரிவித்தனர். கோடிக்கணக்கு மதிப்பிலான மோசடி வழக்கை கான்ஸ்டபிள் பதவியில் இருபவரை கொண்டு விசாரித்ததாகவும், மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிப்பதில் தயக்கம் காட்டுவதால் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று போராடும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் குமரேசன் கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தமிழரசன் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் அவரது மகள் மாதரசியும் அடுத்தடுத்து தறகொலை செய்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தமிழரசன் குறித்து கேட்டபோது கூடிய விரைவில் பிடித்துவிடுவதாகவும் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தனர்.
இந்நிலையில்.திருச்சியில் பதுங்கியிருந்த பிரவினா பல்லடம் வந்த போது போலீசார் சுற்றிவளைத்து பிடித்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இதனிடையே வங்கியில் கடன் கொடுத்த அதிகாரிகள் பத்திரப்பதிவுத்துறையில் பதியப்படாத ஒப்பந்தப்பத்திரத்தை ஏற்றுகொண்டு எப்படி கோடிக்கணக்கில் கடன் கொடுத்தனர்?
கடனை பெற்றவர்களின் தொழில் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சிவக்குமார் என்கிற தனி நபரின் சிபாரிசில் கோடிக்கணக்கில் கடன் கொடுத்தது குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். சாதாரணமாக வங்கியில் 100 ரூபாய் எடுப்பதற்கே கையெழுத்தில் சிறிது மாற்றம் இருந்தால் ஒத்துக்கொள்ளாத வங்கி அதிகாரிகள் கோடிக்கணக்கில் கடன் கொடுக்கும் போது தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தால் இது போன்ற மோசடிகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.
வங்கி கொடுத்த கடனுக்கு அடமானமாக சொத்துக்களை வாங்கியிருந்தாலும் கடன் கொடுப்பது பொதுமக்களின் பணம் என்பதை மனதில் வைத்து அதிகாரிகள் செயல்படவேண்டும். மேலும் சிவக்குமார் மோசடி வழக்கை சிபிசிஐடி க்கு அல்லது சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட்டு வழக்கின் உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை.
– நமது நிருபர்