தமிழகம்

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உறுதி ! : கல்லூரி மாணவியரிடம் ராகுல் பேச்சு

கன்னியாகுமரியில் திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூயில் நடைபெற்ற கலந்தரையாடல் நிகிழ்ச்சியில் பங்கேற்று மாணவிகளின் சரமாரியான கேள்விகளுக்கு, பதில் அளித்து பேசினார்.
தற்போது, நாடு முழுவதும், கொள்கை ரீதியான போர் ஏற்பட்டுள்ளது. ஒன்று, நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தவரும், இனத்தவரும், மொழியினரும் சமமாக கருதப்பட்டு, சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும். ஒருவரை, மற்றொருவர் ஆதிக்கம் செலுத்தக் கூடாது; அழுத்தம் தரக் கூடாது என்ற, கொள்கை உள்ளது.
இன்னொரு பக்கம், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையான, அனைத்து மாநிலத்தவர், இனத்தவர், மொழியினர், ஒரே மையத்தின் ஆதிக்கத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதாகும். இந்த நிலையில், உங்கள் கேள்விகளை எதிர்கொள்கிறேன். எளிமையான கேள்விகளை விட்டு விட்டு, கடினமான கேள்விகளையே கேளுங்கள் என்றார் ராகுல்.


அஸ்ரா என்ற பெண் தனது கேள்வியை கேட்கும்முன் சார் என தொடங்கினார். அதற்கு ராகுல் தன்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்றும், ராகுல் என்றே கூப்பிடுங்கள் என்றும் தெரிவித்தார். அதற்கு அரங்கமே அதிர்ந்தது.
உடனே அந்த மாணவி ஹாய் ராகுல் என தொடங்கினார். நாட்டின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமான, டாடா ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம், சமீபத்தில், நிதி நெருக்கடிக்கு ஆளாகி, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது போன்ற பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க, நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? என்றார்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு, நம் நாட்டில் குறைந்த நிதியே செலவிடப்படுகிறது. நாங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி முன்னேற்றத்துக்கு, தேவையான நிதியை ஒதுக்குவோம். அனைத்தையும் கண்மூடித்தனமாக, தனியார் மயமாக்குவதற்கு பதில், அரசு கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவோம். அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும், ஒரே கொள்கை அமைப்போம் என கூறி அசத்தினார்.
விஷாலி என்ற மாணவி பண மதிப்பிழப்பை எப்படி பார்க்கிறீர்கள்? பொருளாதார முன்னேற்றத்துக்கு என்ன செய்வீர்கள்? பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுக்கும் முன், பிரதமர் மோடி, உங்கள் முன் வந்து, கருத்து கேட்டிருக்க வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமானால், நாட்டு மக்களிடம், அமைதியான, மகிழ்ச்சியான சூழல் இருக்க வேண்டும். எப்போதும் பாரபட்சமாகவும், எதிர்மறையாகவும் சூழல் இருந்தால், பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. முதலில், மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். மக்களுக்கு அதிகாரமும், நிம்மதியான வாழ்வையும் அளிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., வரி, ஐந்து பிரிவுகளாக அமல்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள், நாடு முழுவதும், ஒரே வரி முறையையும், மிகவும் குறைந்த வரி முறையையும் கொண்டு வருவோம். நிரவ் மோடி, விஜய் மல்லையாவை பற்றி தெரிந்திருக்கும். அவர்கள், அரசின் பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டி விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்.
குறிப்பிட்ட செல்வந்தர்களுக்கான அரசாக, தற்போதைய அரசு உள்ளது. இளம் தலைமுறையினர், வேலைவாய்ப்புகளை பெறவில்லை. நிரவ் மோடி, 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், கடன் பெற்று விட்டு, நம் நாட்டில், ஒரு வேலையை கூட உருவாக்கவில்லை. ஆனால், உங்களை போன்றவர்கள், 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவர். ஒரு நாளில், சீனாவில், 50 ஆயிரம் வேலைகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவில், ஒரு நாளில், 450 வேலைகளே உருவாகின்றன. நாம், சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது. அதற்கு ஏற்ப, திட்டங்களை ஏற்படுத்துவோம்” என்றார்.


குஷி என்ற மாணவி பெண்களுக்கு சம உரிமை கிடைக்க, உங்கள் திட்டங்கள், எந்த அளவுக்கு உதவும்என கேள்வி எழுப்பினார்?
அதற்கு பதில் அளித்த ராகுடல உத்தர பிரதேசம், பீஹார் போன்ற, வட மாநிலங்களை ஒப்பிட்டால், தென் மாநிலங்களில், பெண்களின் நிலை சிறப்பாக உள்ளது. இங்கு, பெண் அரசியல் தலைவர்களே உருவாகியுள்ளனர். இன்னும் மேம்பட வேண்டும். நாடு முழுவதும், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளை பார்க்கும்போது, பெண்களின் பங்கு போதிய அளவில் இல்லை. இதற்கு, 33 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்லிமென்ட், சட்ட சபைகள் மற்றும் அரசு துறைகளில், பெண்களுக்கு முக்கிய இடம் கிடைக்க, சட்டம் ஏற்படுத்துவோம்.
பெண்களின் மீதான எண்ணங்களும், பார்வையும் மாற வேண்டும். ஆண்களுக்கு பெண்கள், எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. உண்மையில், ஆண்களை விட, பெண்கள் மேலானவர்கள்; ‘ஸ்மார்ட்’ ஆனவர்கள் என பதில் அளித்தார்.
மறறொரு மாணவி எதிர்க்கட்சியான நீங்கள், பல்வேறு ஊழல் பிரச்னைகளில், பெரும்பாலும் அமைதியாக இருந்துள்ளீர்களே? குறிப்பாக, உங்கள் மைத்துனர் ராபர்ட் வாத்ரா தொடர்பான பிரச்னையில், எதுவும் பேசவில்லையே? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ராபர்ட் வாத்ரா விவகாரத்தில், நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டத்தின் அடிப்படையில், யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். அனைவர் மீதும், சட்ட நடவடிக்கை சமமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் மீது மட்டும், சட்ட நடவடிக்கை என்பது பாரபட்சமானது. ராபர்ட் வாத்ராவிடம் விசாரணை நடத்தட்டும். அதற்கு, முதல் ஆளாக, நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button