தமிழகம்

வரலாறு காணாத கனமழை : நீலகிரியில் நிவாரணப் பணிகள் நிலவரம் என்ன?

வரலாறு காணாத கனமழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுன்னு நீலகிரி மாவட்டமே தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த 100 வருடகாலத்தில் பெய்யாத அளவில், அங்கு 3 ஆயிரம் மி.மீ. அளவுக்கு மழை பெய்துளள்ளது. பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இன்னும் போதுமான உதவிகள் போய்ச் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகாரிகளும் அமைச்சர்களும் அங்கே வருகை தந்தும் கூட அரசுத் தரப்பில் இருந்து போதுமான உதவிகள் இன்னும் முழுசா கிடைக்கலை என்று வீடுகளை இழந்தும் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள் குமுறுகிறார்கள்.

அவலாஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஊருக்குள் செல்லும் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன் அவலாஞ்சி சென்ற அரசுப் பேருந்து ஒன்று திரும்ப முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்த வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்தனர். மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக அவலாஞ்சி மின் நிலையத்தில் இருந்து அவலாஞ்சி அணைக்கு தண்ணீர் செல்லும் 15 அடி ஆழம் கொண்ட கால்வாய் முழுவதுமாக மரங்களும், சேறும் சகதியும் நிரம்பிக் கிடக்கின்றன.

மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில் ராணுவ வீரர்கள் அடங்கிய மீட்பு படையினர் எமரால்ட் பகுதியில் முகாமிட்டு, அவலாஞ்சி செல்லும் சாலைகளை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சீரமைத்து வருகின்றனர். இதனால் 5 நாட்களாக முற்றிலுமாக போக்குவரத்து முடங்கி இருந்த நிலையில் இப்போது இலகுரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கூடலூர் செல்லும் வழியில் உள்ள் இந்திராநகர் என்ற இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். வீடுகள் இடிந்ததால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், உதவித்தொகையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடுவட்டம் நிவாரண முகாமுக்குச் சென்ற அவர் அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்தார். பின்னர் கூடலூருக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரண உதவிகளையும் வழங்கினார். திமுக சார்பில் நிவாரணப் பணிகளுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
நீலகிரியில் மு.க.ஸ்டாலின் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட சென்றது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விளம்பரத்திற்காக அங்கே சென்றுள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார்.


கனமழையால் பாதிக்கப்பட்ட கூடலூர், பந்தலூர் பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். பின்னர், உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாட்களில் பெய்ததே, சேதங்கள் ஏற்பட காரணம் என தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்களில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வீடுகள் முழுமையாக இழந்தவர்களுக்கு 6 மாதங்களுக்குள் புதிய வீடுகள் கட்டி தரப்படும் என குறிப்பிட்டார்.


உதகையில் கனமழை, நிலச்சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி உதகை-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை கடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே அங்கு இயல்பு நிலை திரும்பியதால், குன்னூர்-உதகை இடையே மலை ரயில் சேவை இயக்கப்பட்டது. என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சாகுல் ஹமீது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button