தமிழகம்

“மாஞ்சோலை” மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படுமா..?

திருநெல்வேலி மாவட்டம், அம்பை தாலுகா, மணிமுத்தாறு மேற்கே உள்ளது. “மாஞ்சோலை” எனும் அழகிய கிராமம். விரைவில் மாஞ்சோலை என்பது வெறும் காடாக போகின்ற அளவுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது இந்த ஊருக்கு.

இந்த கிராமத்தில் கடந்த 90 வருடமாக மக்கள் மூன்று தலைமுறைக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அதுவும் தேவர், நாடார், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழும் ஊர். இங்கே ஒரு வீட்டிலே நல்லது கெட்டது என்றால் அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக கூடுவார்கள். இது மாஞ்சோலை உள்ளிட்ட அனைத்து எஸ்டேட் மக்களின் தனிச்சிறப்பு. (இந்த ஒற்றுமையை பார்த்துதான் கலைஞர் கருணாநிதி அவர்கள் சமத்துவபுரம் என்னும் திட்டத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக செயல்படுத்தினார்)

இங்கே மாம்பழம், சிவப்புகொய்யா, லக்கோட் பழம், தாட்டுபுட்டான் பழம் காளான், பீன்ஸ், அவரை, பயறு வகைகள், சீனிவாழை, பெரிய பப்பாளி, தேயிலை, காப்பி, மிளகு, ஏலக்காய், ரப்பர் மற்றும் ஊட்டி, இலங்கை, கேரளா, இங்கிலாந்தில் விளைகின்ற அத்தனை பொருட்களும் விளைவதற்கு ஏற்ற தரமான மண் மற்றும் குளிர்ச்சியான சூழ்நிலை அனைத்தும் இங்கே இயல்பாகவே காணப்படுகிறது. இன்னமும் பல பொருட்கள் விழைந்து கொண்டிருக்கிறது. இது இந்த மண்ணிற்கான சிறப்பு.

இந்த மாஞ்சோலையில் காக்காச்சி, மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, கோதையாறு என மொத்தம் 6 எஸ்டேட் உள்ளது. கர்ம வீரர் காமராஜர் திறந்த பள்ளி இங்குள்ளது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் போன்ற அனைத்து மத கோவில்கள் உள்ளது.

இந்த மாஞ்சோலையில் வேறு மாநிலமான பாம்பாய் மாநிலத்தை சேர்ந்த தனியார் கார்பரேட் நிறுவனமான BBTC என்ற நிறுவனம் சுமார் 8300 ஏக்கர் இடத்தை அரசிடம் குத்தகை எடுத்து நடத்தி தேயிலை பயிரிட்டு அங்குள்ள மக்களுக்கு வேலை வழங்கி ஏராளமான லாபமடைந்து வருகிறது.

இந்த நிறுவனம் செய்த தவறு என்னவென்றால் அங்குள்ள மக்கள் வீட்டிற்கு அருகில் பரம்பரையாக காடுகளை ஆக்கிரமித்து சொந்தமாக வைத்திருந்த காய்கறி தோட்டங்களை எல்லாம் அழித்தார்கள். அதன் பின் அந்த மக்கள் இடத்திலும் அவர்கள் கம்பெனியின் தேயிலை செடியை அங்குள்ள மக்களை வைத்தே நட்டார்கள். (இதுதான் முதல் மாஞ்சோலை மக்கள் பிரச்சனை) பிறகு அந்த நிறுவனம் நீதிமன்றத்திற்கும் சென்று 8300 ஏக்கரும் எங்கள் இடம் என்றும் அதற்கு பட்டா வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்து சுமார் 40 வருடம் வழக்கு நடத்தினார்கள். ஆனால் தமிழகத்தின் ஜெயலலிதா அரசும், வனதுறையும் எடுத்த சிறப்பான முயற்சியால் மாஞ்சோலை மீண்டும் தமிழ்நாடு அரசின் வசம் வந்தது. அந்த தனியார் நிறுவனத்திற்கு பட்டா கிடைக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தோற்றுபோனார்கள்.

தமிழக அரசு நினைத்தால் எந்நேரமும் அந்த வேற்று மாநில தனியார் நிறுவனத்தின் குத்தகையை முடிக்கலாம் அல்லது மீதமுள்ள குத்தகை காலமான 2028 வரை மட்டும் இருக்கலாம். இதில் எது முதலில் நடக்கிறதோ அதன் பின் மாஞ்சோலை வெறும் காப்புகாடாக மாற்றப்படும் என்பது. (இதில் மாஞ்சோலையில் தற்போது வாழும் பரம்பரை தமிழ் மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் அங்கிருந்து ஏற்கனவே முதல் மாஞ்சோலை பிரச்சனையினால் வெளியேறியவர்களை பற்றியும் ஒரு வரி கூட சொல்லப்படவில்லை. இதனால் அனைவருமே கலக்கமடைந்துள்ளனர்)

  1. இலங்கை அகதிகளுக்கு தமிழகத்தில் TANTEA மூலம் ஜெயலலிதா அரசு தமிழகத்திலே சிறப்பான வாழ்வாதாரம் அமைத்தது போல் மாஞ்சோலை தனியார் நிறுவனம் விரைவாக வெளியேறிய பின் அரசு அந்த தேயிலை தோட்ட தொழிற்சாலையை எடுத்து நடத்தி தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். காடாக மாற்றி அங்குள்ள மக்களை அகதிகள் போல் ஆக்கிவிட கூடாது.
  2. தமிழத்தின் பல்வேறு அரசு இடங்களில் சுமார் 10 வருடத்திற்கு மேல் வாழ்ந்தவர்கள் பலர் இலவச பட்டா வாங்கி வீடு கட்டி வாழ்வதைப்போல் மாஞ்சோலையில் குறைந்தது 50 வருடத்திற்கு மேல் இரண்டு தலைமுறையாக அங்கேயே பரம்பரையாக வாழும் மக்களுக்கு அங்கேயே குடியிருப்பு பட்டாவும், தோட்டத்திற்கான பட்டாவும் வழங்கிட வேண்டும்.
  3. கேரளாவிலுள்ள மூணார் எஸ்டேட் முதலில் தமிழத்தில் இருந்தது. மாஞ்சோலையை போல் எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது. பின்னர் அது கேரளாவுக்கு மாறியது. இப்போது அங்குள்ள மக்களுக்கு இலவச பட்டா, சொந்த வீடு, தரமான இரு வழி சாலைகள், சுற்றுலா தலங்கள், பல்வேறு நட்சத்திர உணவகங்கள், வெளி நாட்டினர் வருகை என வெளிநாட்டிற்கு இணையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதே போல் மாஞ்சோலையும் வளர்ச்சி அடையவும், திருநெல்வேலிக்கு பெருமை ஏற்படவும், தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமாகவும், அரசுக்கு அந்நிய செலவானி வரவும், வெளிநாட்டை மிஞ்சும் வகையில் வளர்ச்சி ஏற்படவும் தற்போதுள்ள தமிழக அரசும், மத்திய அரசும் நல்ல பதிலை மக்களுக்கு சொல்ல வேண்டும்.

4.மாஞ்சோலை மக்களின், வாழ்வாதாரம், மாஞ்சோலை வளர்ச்சி மற்றும் திருநெல்வேலியின் பெருமை குறித்து அறிக்கை விரைவாக அரசிதழில் வெளிவர வேண்டும்.

காவிரி பிரச்சனையில் கர்நாடகாவிலுள்ள அனைத்து கட்சிகளும் மக்களும் ஒற்றுமையாக இருப்பதைப்போல், ஐல்லிகட்டு பிரச்சனையில் அனைத்து கட்சியும் ஒன்றினைந்ததுபோல் நம் தமிழகத்திலுள்ள மாஞ்சோலையை காக்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.

ரமாநந்தன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button