சரிந்து வரும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் செல்வாக்கு..! : குமுறும் தேனிக்காரர்கள்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பூர்வாங்க பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ் வாயாலேயே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஓபிஎஸ் முன்னிறுத்திய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டாலும் கூட, அதில் ஓபிஎஸ்&ன் ஆதரவாளர்கள் பெரும்பான்மைக்கு குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். இருந்தபோதும், முதல்வர் பழனிசாமியின் இழுத்த இழுப்புகள் அனைத்துக்கும் ஓபிஎஸ் சென்றுள்ளார்.
இதன் பின்னணி குறித்து விவரிக்கும் அரசியல் விவரம் அறிந்தவர்கள், தர்மயுத்த காலத்தில் தன்னுடன் பயணித்த பலருக்கும் ஓபிஎஸ் எதுவும் செய்யவில்லை என்றும், தனக்கான பதவி, அவரது மகனுக்கு எம்.பி. பதவி உள்ளிட்டவைகளை மட்டுமே அவர் சாதித்துக் கொண்டார் என்ற விமர்சனங்கள் வெளிப்படையாகவே சிலரால் வைக்கப்பட்டது என்று சுட்டிக் காட்டுகின்றனர். இத்தகைய காரணங்களால் ஓபிஎஸ்-&ன் செல்வாக்கு கட்சியிலும் குறைந்து விட்டது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், தனது சொந்த மாவட்டத்திலும் அவருக்கு முன்பு போல பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்று கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஓபிஎஸ்&க்கு டஃப் கொடுக்கும் ஜக்கையன் தற்போது எடப்பாடியின் ஆதரவாளராக உள்ளார். எனவே, தேனியை இரண்டாக பிரித்து ஒரு மாவட்டத்தை ஜக்கையனுக்கு கொடுத்து தன்னுடைய செல்வாக்கை அங்கு நிலைநிறுத்த ஈபிஎஸ் ஆர்வம் காட்டி வந்ததாகவும், ஆனால், மாவட்டத்தை பிரிக்க ஓபிஎஸ் கண்டிப்புடன் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
எனவே, தனது சொந்த தொகுதியாக போடியில் மட்டுமாவது தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் ஓபிஎஸ்., தேனி மாவட்டத்துக்கு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தனது செல்வாக்கை பயன்படுத்தி போடி தொகுதிக்கு மட்டும் செயல்படுத்துவதாக தேனி மாவட்டத்துக் காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எதிர்வரவுள்ள தேர்தலில் அவர் போட்டியிட உத்தேசித்துள்ள போடி தொகுதிக்கு மட்டுமே பெரும்பாலான நலத் திட்ட உதவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும், தேனி மாவட்டத்தில் மற்ற தொகுதிகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்ற பகிரங்க குற்றச்சாட்டுகளையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.
பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, ரூ.265 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி என கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஓபிஎஸ் தனது போடி தொகுதிக்கு மட்டும் கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்திலும் கூட, தேனி மாவட்டத்துக்கு மொத்தம் 16 மினி கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், போடி தொகுதிக்கு மட்டும் 8, மாவட்டத்தின் ஏனைய தொகுதிகள் அனைத்துக்கும் சேர்த்து வெறும் 8 கிளினிக்குகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மற்ற தொகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், “ஓபிஎஸ் செல்லும் அனைத்து நிகழ்ச்ச்சிகளுக்கும் எங்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். வேறு வழியில்லாமல் நாங்களும் சென்றாக வேண்டியுள்ளது. இறுதியாக அவரது தொகுதிக்கும் மட்டும் நலதிட்ட உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இது நாங்கள் சார்ந்திருக்கும் தொகுதியில் எங்களுக்கு அவப்பெயரை சம்பாதித்துத் தருகிறது” என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.
அதேசமயம், முதல்வர் பழனிசாமியோ தான் சார்ந்திருக்கும் எடப்பாடி தொகுதிக்கு மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தனக்கான செல்வாக்கை அதிகரித்துக் கொண்டதுடன், கொங்கு பெல்ட்டில் இருக்கும் அமைச்சர்களையும் வளர்த்து விட்டுள்ளார். இதன் மூலம் அவரது செல்வாக்கு உயர்ந்ததுடன் மற்ற அமைச்சர்களுக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ தன்னுடையெ சுயநலத்துக்காக மட்டுமே அனைத்தையும் செய்து கொண்டு வருகிறார் என்று குமுறும் தேனிக்காரர்கள், வேதனையின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.
– நமது நிருபர்