தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு: சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்: – ராமதாஸ்
தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டால், அது சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா முழுவதும் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. இதற்கான வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டால், அது சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. எனினும், தனியார் கல்வி நிறுவனங்களில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், இப்போது கொண்டு வரப்படவிருக்கும் இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் அதை வரவேற்கிறது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொடுத்ததில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் இருந்தாலும், மன்மோகன்சிங் தலைமையிலான அரசு அமைந்து இரு ஆண்டுகளான பிறகும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து விவாதிப்பதற்காக 2006- ம் ஆண்டு மே மாதம் 23- ம் தேதி தில்லியில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்கள் கூட்டத்திலும் 27% இடஒதுக்கீட்டைத் தள்ளிப்போட முயற்சிகள் நடைபெற்றன. அதற்கு எதிராகக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.கவின் பிரதிநிதிகள் வாயைத் திறக்கவில்லை.
இடஒதுக்கீட்டைத் தள்ளிப்போடும் முயற்சிக்கு எதிராக நான் கடுமையான கண்டனக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, அது குறித்து மாலையில் மீண்டும் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு என்னிடம் பேசிய அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரிடம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாகக் கூறினேன். அதுமட்டுமன்றி லாலுபிரசாத் யாதவ், இராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் ஆதரவையும் திரட்டி, அவர்களையும் இடஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வைத்தேன். அதன் பயனாகவே 27% இடஒதுக்கீடு சாத்தியமானது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது அது சாத்தியமாவது மகிழ்ச்சியளிக்கிறது; மனநிறைவளிக்கிறது.
ஆண்டாண்டு காலமாக சமூக அடிப்படையில் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் இத்துடன் முடிவடைந்து விடுவதில்லை. கல்வியைக் கடந்து வேலைவாய்ப்பிலும் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து விட்ட நிலையில், தனியார் துறையில் அனைத்துத் தரப்பினருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சுமார் ஒன்றரைக் கோடி ஆகும். அவற்றில் 24 லட்சத்துக்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை நிரப்பப்பட்டால் 24 லட்சம் குடும்பங்கள் பயனடையும். ஆனால், அவற்றை நிரப்ப மத்திய அரசு தயாராக இல்லை. இத்தகைய சூழலில் 6 கோடிக்கும் கூடுதலான அமைப்பு சார்ந்த பணியிடங்களைக் கொண்ட தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதன் மூலமாகவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கும் சமூகநீதி வழங்க முடியும்.
எனவே, தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவுடன், தனியார்துறை வேலைவாய்ப்புக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.