சசிகலா போட்ட மாஸ்டர் பிளான்… : குழப்பத்தில் அதிமுக நிர்வாகிகள்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் பயணித்தவர். சசிகலாவின் ஆசி இருந்தால் மட்டுமே யாராக இருந்தாலும் ஜெயலலிதாவை சந்திக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அதிமுக எனும் கோயிலில் ஜெயலலிதா சாமி என்றால் சசிகலா தான் பிள்ளையார். பிள்ளையாரின் தரிசனம் கிடைத்தால் தான் தெய்வத்தின் அனுகிரகம் கிடைக்கும் என்பது அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை உள்ளவர்கள் நம்பிக்கொண்டு இருந்தனர். அதுமட்டும் அல்லாமல் அதிமுக வட்டாரத்தை தாண்டி தமிழக அரசின் உள் விவகாரங்களிலும் சசிகலாவின் பங்கு பெரிதும் இருந்ததாக பேசப்பட்டது. இதை அதிமுக முன்னணி நிர்வாகிகளே அவ்வப்போது சொல்வது உண்டு.
அந்தளவுக்கு நகமும் சதையுமாக, ஜெயலலிதா- சசிகலா இருவரும் இருந்த நிலையில் இருவரது வாழ்க்கை மற்றும் அரசியலில் சொத்து குவிப்பு வழக்கு விதியாக வந்து விளையாட்டு காட்டியது. இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு மரணம் நேர்ந்ததால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். இந்த பதவியை சசிகலா ஏற்க முடிவு செய்ததால் ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தத்தில் இறங்கினார். இதன் பாஜக பக்கபலமாக இருந்ததாக அப்போது பரவலாக பேசப்பட்டது. இதன் பலனாகவே சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக வாசிக்கப்பட்டதால் சசிகலா சிறைக்கு செல்ல நேர்ந்தது. முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி தனது நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்வார் என தப்புக்கணக்கு போட்டு முதலமைச்சர் பதவியை தந்து விட்டு கெத்தாக சிறைக்கு சென்றார் சசிகலா.
சசிகலா சிறைக்கு சென்றதும் டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த அதிமுக பின்னர் நாளடைவில் அவருக்கு அல்வா கொடுத்துவிட்டு பாஜக சொல்லுக்கு தலையாட்டும் பொம்மைகளாக இருப்பதற்கான அடிமை சாசனத்தில் கையெழுத்துபோட்டு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இணைந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு உள்ளிட்ட திட்டங்கள் எதை ஜெயலலிதா எதிர்த்தாரோ?, அவற்றை ஆரத்தழுவி வரவேற்று தமிழக மக்களின் ஏகோபித்த கோபத்துக்கு ஆளானது அதிமுக. இதற்கிடையே சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதால் அதிமுக முதுகில் பலமாக ஏறி அமர்ந்து கொண்டது. பாஜகவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா அறிவித்து இருந்த நிலையில் கட்சியின் திடீர் முடிவு தொண்டர்களின் மனதை வெகுவாக பாதித்தது.
விளைவு, தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி மண்ணை கவ்வியது. ஆட்சிக் கனவுடன் 10 ஆண்டு காலம் காத்திருந்த நிலையில், அதிமுகவுக்குள் பாஜக நுழைந்ததால் திமுகவுக்கு ஜாக்பாட் அடித்து ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. இதற்கிடையே தண்டனை காலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததால் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து தமிழகம் திரும்பினார். முன்னதாக, சசிகலாவை கட்சியில் இருந்தே நீக்கி இருந்ததால் அதிமுகவை மீட்பதே தனது லட்சியம் என முழங்கினார். ஆனால்‘சூரியனை பார்த்த குரைத்த நாய் போல்’ என்ற வசனத்தை எடப்பாடி பழனிச்சாமி பேசி துரோக முத்திரையை தனது நெற்றியில் பதித்து கொண்டார். அதில் இருந்து சசிகலா வெளியில் இருந்தபடி அதிமுக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடன் பயணித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அல்வா கொடுக்க முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி முன்னணி நிர்வாகிகளை வளைத்துக்கொண்டு ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்தார். அத்துடன் நிற்காமல் பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டே நீக்கிவிட்டு அதிரடி காட்டியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஒருபுறம் அதிமுகவுக்கு உரிமை கோரி சசிகலாவும், மறுபுறம் ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். அதே சமயம் சசிகலாவுடன், ஓ.பி.எஸ் இணைந்து செயல்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் அதிமுக முன்னணி தலைவர்களுள் ஒருவரும், தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது சசிகலா, ‘என்னுடைய மூத்த அண்ணனை பார்க்க வந்தேன். அரசியல் விஷயமாக கலந்து பேசினேன். எல்லோரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை’ என சசிகலா பேசியுள்ளார். இதற்கு வலுசேர்க்கும் வகையில் அதிமுகவில் நாடகம் நடக்கிறது. விரைவில் க்ளைமாக்ஸ் வரும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் இருக்கும் முன்னணி நிர்வாகிகள் பலரையும் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரனை பொறுத்தவரை 5 முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர் அமைச்சரவைகளில் 4 முறை மின்சார துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழக அரசியலில் அவிழ்க்க முடியாத முடிச்சுகளையும் அவிழ்ப்பதில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு நிகர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான் என மூத்த அரசியல்வாதிகளே கூறும் அளவுக்கு பக்குவம் கொண்டவர். இதை நன்றாக தெரிந்து வைத்துள்ள காரணத்தினாலேயே அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் க்ரீன் சிக்னல் கொடுத்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன. எனவே விரைவில் சசிகலா தலைமையில் அதிமுகவை கட்டமைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் கெத்து காட்டுவார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.