பாமகவின் சினிமா அரசியல்..! : அன்று முதல் இன்று வரை…
ஜெய்பீம் படம் வெளியாகி சில நாட்களில் சமூக வலைதளம் முழுவதும் அந்தப் படத்தின் தாக்கமும், விமர்சனமும் தான் பேசப்பட்டு வருகிறது. வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை குற்றவாளியின் வீட்டிலும், அந்த குற்றவாளிக்கு குரு என்று பெயர் வைத்து வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியதாக குற்றம் சாட்டியது பாமக. இதோடு அந்தப் படத்தின் நாயகன் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம், நஷ்ட ஈடு ஐந்துகோடி வழங்க வேண்டும் என்ற விவகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் பாமகவுக்கு புதிதல்ல.
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தால் ராமதாசுக்கும், ரஜினிக்கும் வார்த்தை போரே நடந்தது. பாபா படம் வெளியான போது இளைஞர்களுக்கு தன்னுடைய படங்களில் குடிப்பதற்கும், சிகரெட் பிடிப்பதற்கும் கற்றுத்தரும் ரஜினி வன்னியர் சமுதாயத்தை இழிவாக பேசி வரும் ரஜினியின் பாபா படத்தை வன்னியர்கள் யாரும் பார்க்கக் கூடாது என பாமக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உத்தரவிட்டார் ராமதாஸ். பதிலுக்கு ரஜினி ரசிகர்களும் ராமதாசுக்கு கண்டன அறிக்கைகளை வெளியிட்டார்கள். இந்தப் பிரச்சனை இதோடு இல்லாமல் பாபா படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் குறிப்பாக பெரம்பலூர் ஜெயங்கொண்டத்தில் தாக்குதலில் ஈடுபட்டது பாமக. பாபா படத்தின் படப்பெட்டியை தூக்கியதோடு பேனர்கள் மீது தீவைத்து தியேட்டர்களை சூரையாடினர்.
இந்நிலையில் ராமதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். பாபா படம் வெளியான தியேட்டர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவார்கள். ரசிகர்கள் பாதுகாப்பாக படம் பாருங்கள் என்று அறிக்கை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களை தூண்டிவிட்டு படத்திற்கு விளம்பரம் தேடுகிறார் ரஜினி என்று பாமகவும் பதிலுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருவண்ணாமலையில் பேசிய ராமதாஸ் ரஜினினை சேற்றில் விழுந்த பன்றி என விமர்சித்து பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த ரஜினி ரசிர்கள் சென்னை விமான நிலையம் அருகே ராமதாசுக்கு கருப்புக் கொடி காட்டினர். அப்போது கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது பாமக.
அதன்பிறகு தான் நடிகர் ரஜினி ராமதாசை நேரடியாக விமர்சனம் செய்து அறிக்கையை வெளியிட்டார். பெரியவர், படித்தவர், கட்சியின் தலைவர், காட்டுமிராண்டித்தனமான நாச வேலைகளில் ஈடுபடலாமா? அரசியலில் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள். ஊழல், வன்முறை. ராமதாஸ் வன்முறையின் ராஜாவாக இருக்கிறார். அரசியல் என்கிற பெயரில் இதுபோன்ற அராஜகத்திலும், வன்முறையிலும் ஈடுபடும் ராமதாசை என்னோட தனிப்பட்ட பாதிப்புக்காக நான் எதிர்க்க வில்லை. தமிழக மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன். ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகள் இருப்பதால் தான் நல்லவர்கள் அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள் என அறிக்கை வெளியிட்டதோடு பாமக போட்டியிடும் தொகுதிகளில் ரஜினியின் ரசிகர் மன்றத்தினரை பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் வலியுறுத்தினார் ரஜினி.
அப்போது ஒரு விழாவில் நடிகர் விஜயகாந்த் பேசும்போது, தன்னோட சுயநலத்துக்காக சாதி அரசியலை கையில் எடுக்கிறார் ராமதாஸ். மக்களை சந்திக்காமல் எம்.பி ஆனதே தவறு. அதிலும் அமைச்சர் ஆனது அயோக்கியத்தனம் என அன்புமணி, ராமதாஸ் இருவருக்கும் பதிலடி கொடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் விஜயகாந்தை அரைவேக்காடு என விமர்சனம் செய்தார். அடுத்து ரஜினி விவகாரங்களில் பயன்படுத்திய அதே பார்முலாவை பயன்படுத்த தொடங்கியது பாமக. அப்போது விஜயகாந்தின் கஜேந்திரா படத்தை வெளியிட விடாமல் பிரச்சனை செய்ததோடு, விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து வடமாவட்டங்களில் போஸ்டர்களை ஒட்டியது பாமக.
ஆனால் விஜயகாந்த் ரஜினி மாதிரி ஒரு அறிக்கையோடு இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என நினைக்கும் போது அதற்கு நேர்மாறாக இருந்த விஜயகாந்தின் நடவடிக்கைகள் சுற்றுப்பயணம், மாநாடு என வேகமெடுத்த விஜயகாந்த் அதேவேகத்தில் கட்சியையும் ஆரம்பித்தார். பாமகவுக்கு எதிராக வட மாவட்டங்களில் களமிறங்கிய விஜயகாந்த், பாமகவிலிருந்து ஒதுங்கியிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தனது கட்சியில் அவைத் தலைவர் பதவியை வழங்கினார். வடமாவட்டங்களில் விஜயகாந்தின் செல்வாக்கு அதிகரித்தது.
2006 ல் தான் சந்தித்த முதல் தேர்தலில் வெற்றி பெற்றார் விஜயகாந்த். பாமகவின் செல்வாக்குள்ள தொகுதி விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றதை பாமகவே எதிர்பார்க்கவில்லை. அதிலிருந்து இரண்டு கட்சிகளுக்குமாக மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே தான் இருந்தது. இரண்டு கட்சியினரும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட போது ஒருவருக்கொருவர் ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை. நடிகர்களுக்கும், பாமகவினருக்கும் இதுபோன்ற மோதல்கள் நீண்ட காலமாக இருக்கும்போது மறுபடியும் அதுபோன்ற சம்பவங்கள் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் விவகாரத்திலும் நடந்து வருகிறது. அடுத்து சூர்யாவின் திரைப்படங்கள் வெளியாகும்போது பாமகவினர் திரையரங்குகளில் கோபத்தை காட்டக்கூடும் என அன்புமணி சூர்யாவுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை பாபா பிரச்சனையும், கஜேந்திரா பட நிகழ்வுகளையும் மறுபடியும் ஞாபகப்படுத்தும் விதமாக தெரிகிறது. சினிமாவை விட இங்கு கவனம் செலுத்துவதற்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
சமூக மாற்றங்களுக்கான உங்களுடைய போராட்டங்களே நிறைய இருக்கிறது என பாமகவிற்கு குறிப்பாக அன்புமணிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா. பாமகவினர் இனி அடுத்து என்ன செய்யப்போகிறார்கள். ஜெய்பீம் படத்தோட இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்களா? அல்லது அன்புமணி சொல்வது போல் சூர்யாவின் அடுத்தப் படத்திற்கும் பாமக தங்களது எதிர்ப்பை தொடருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
– குண்டூசி