கொலை களமாகும் திருப்பூர் ! துவங்கியதா கேங்ஸ்டர் ஆபரேஷன் ?
திருப்பூரில் கடந்த சில நாட்களாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது, அடிதடி, கொடூர கொலை என தொழில் நகரை பீதியில் உறைய வைக்கும் சம்பவங்கள் அரங்கேறிவருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18 ஆம் தேதி கே.என்.பி நகரில் பிரபல ரவுடி தினேஷ் எதிர் தரப்பை சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பல் தலைவன் ராஜேஷ் மற்றும் கூலிப்படையினரால் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட்டான்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் உட்பட நான்கு பேரைத் தவிர 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே பல்லடத்தில் லாரி ஓட்டுநர் வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஏர் கன் என கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே பல்லடத்தை அடுத்த அருள்புரம் செந்தூரான் காலனி அருகில் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ஆய்வாளர் அனுராதா மற்றும் பல்லடம் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டபோது அறையில் கத்தி, அரிவாள், ஏர் கன் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அங்கு பதுங்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த காசிம் (32), விபிந்தாஸ்(33), திருப்பூரை சேர்ந்த நவீன் ஆனந்த்(33), செல்வ கணபதி(30) ஆகிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கூலிப்படையினராக செயல்பட்டதும், கேரளாவை சேர்ந்த சபரி மற்றும் ஷியாம் ஆகியோர் தலைமையில் இயங்கி வருவதும் தெரிய வந்தது. மேலும் பிடிபட்ட கூலிப்படையினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பூர் மாநகரத்தில் கொடூர கொலை செய்யப்பட்ட ரவுடி தினேஷின் நண்பர்கள் எனவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கூலிப்படையினர் தினேஷை கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க பதுங்கியிருந்தனரா ? என்பன போன்ற கேள்வி எழுகிறது. மேலும் கரைப்புதூரில் அதிக அளவில் கூலிப்படையினர் பதுங்கியிருந்து தொழிலாளர்களை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிக அளவில் நடந்தது. மேலும் மாநகரில் கொடூரமாக கொலை கொள்ளையில் ஈடுபடும் கூலிப்படையினர் புறநகரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்து தங்களது கேங்ஸ்டர் ஆப்ரேசனை நடத்தி வருவது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கோடிக்கணக்கில் பணம் புரளும் திருப்பூரில் கேங்ஸ்டர்கள் உருவாவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என தொழில்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே மாநகர காவல் துறையும் புறநகர் காவல்துறையும் இணைந்து கூட்டாக இணைந்து தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி சிறையில் இருந்து வெளியே வரும் கூலிப்படையினரின் செயல்பாடுகளை கண்காணிப்பதோடு புதிதாக புறநகரில் பல்லடம் அருள்புரம், கரைப்புதூர், சேடபாளையம், மகாலட்சுமி நகர், ஆறுமுத்தாம்பாளையம் மற்றும் திருப்பூர் மாநகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் புதிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பொதுவாக பல்லடம் காவல் நிலையம் பொது மக்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அவசரத் தேவைக்கு பல்லடம் காவல் நிலையத்தின் தொடர்பு எண் 04255 252100 எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், எளிதாக பொதுமக்கள் தொடர்புகொள்ள எண்ணை அறிவித்து கிராமங்கள் தோறும் தெரிவித்தால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவர் எனவும், குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தமுடியும் என பொது மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் போலீசாரின் கூட்டு நடவடிக்கை குறித்து பொதுமக்களிடையே வெளிச்சம்போட்டு காட்டினாலே கூலிப்படையினரின் கொலை வெறியாட்டம் முடிவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.