கொரோன, மழையால் பாதித்தோருக்கு ரூ 5000 வழங்க வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்
2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தது, அரசியல் சுய லாபம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொதுநலத்துக்காகவே வழங்கியதாக முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகையை அறிவித்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் காணொலி மூலம் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், கொரோனா பெருந்தொற்று காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது தமிழக அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அதே சமயம், ₹2500 வழங்குவதை வரவேற்பதாக தெரிவித்த ஸ்டாலின், கொரோனா, மழையால் பாதித்தோருக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களும் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே 2500 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.