அரசியல்

ஜெயலலிதா நினைவு நாள் : ‘பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்’ – : அதிமுக சூளுரை

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொது செயலாளருமான ஜெயலலிதாவின் நான்காவதுநினைவு நாளையொட்டி அதிமுக தலைமை சூளுரை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப் பட்டுள்ளதாவது, ‘’ டிசம்பர், 5 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே உலகம் என வாழும் கோடான கோடி தொண்டர்களுக்கும் அம்மா என்னும் மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்க அதனை உளமார நேசித்து வாழும் உலகத் தமிழர்களுக்கும் பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்.

சிப்பிக்குள் தவமிருந்து முத்துக்கு உதிப்பது போல், செந்தமிழ் பூமிக்கு சேவையாற்றி சந்தனமாய் கரைவதற்கே, சந்தியா தாய் வசத்தில் சங்கல்பம் வாங்கி வந்த சரித்திரமாய் நெருப்பாற்றில் நீந்தி நித்தமும் பிறப்பெடுத்த ஃபீனிக்ஸ் பறவையாய், தேசத்தின் பொது வாழ்வு முழுவதுமே ஆணாதிக்கத்தால் நிரம்பி வழிந்த காலத்தில், பேரறிஞர் அண்ணா அமர்ந்த பெருமைமிக்க அதே மாநிலங்களவை இருக்கையில்

தான் அமர்ந்து, பின்னாளில் அகவை நாற்பதில் அரசாள வந்து அரசியல் உலகையே தேனாதிக்கமாய் மாற்றிக்காட்டிய திறமைகளின் குவியலாக, இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கம் திருப்பி காட்டிய தேவதையாக 6 முறை தமிழகத்தை அரசாண்டு தன் சிங்க நாதத்தை முடித்துக்கொண்டு வங்கக் கடலோரம் துயில் கொண்டும், நம்மை வழிநடத்தும் தெய்வமாய் புரட்சித்தலைவி அம்மா நம்மை விட்டு விடைபெற்ற இந்நாளில் தான், அவர் தம் நீங்காத நினைவுகளில் ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழினமே ஆழ்ந்திருக்கிறது.

‘’மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ என்னும் மாதவத்தால் வாழ்ந்து, எம்மக்கள் யாரிடத்திலும் எதற்காகவும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என்னும் இலட்சியத்தை சுமந்த அந்த சத்திய தாய் நம்மை விட்டுப் பிரிந்தாலும் நம்மிடம் ஒப்படைத்து போன அரசாட்சியை இன்று இந்திய தேசமே புகழும் நல்லாட்சியாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்

ஒட்டிய உயிர்களுக்கெல்லாம் உணவிட்டு மகிழ்ந்து, ஓலை குடிசைக்குள் ஒரு விளக்கேற்றி, உலகத்தர கல்வி, உயரிய மருத்துவம், உழவினத்தின் நீரோட்டம் பெருக்கும் திட்டங்கள் என தாய் நாட்டில் தமிழகத்தை தலையாய மாநிலமாக உயர்த்துவதையே லட்சியமாக கொண்டு உழைக்கின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

நம் வெற்றித் திருமகளாம் புரட்சித்தலைவி அம்மா மறைவுற்ற இந்நாளில், தமிழகத்து மக்களை நெஞ்சில் சுமந்து, நம் தன்னிகரில்லா அம்மா சேமித்து வைத்திருந்த கனவுகளையும், லட்சியங்களையும் சாத்தியமாக்கிட; அகல் விளக்கு ஏற்றி வைத்து அம்மாவின் திருவுருவ படத்தின் முன்னே வீர சபதம் எடுப்போம்.

‘’தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’’ என்பதை நனவாக்கி முடிப்போம். பொது வாழ்வு என்பது அதிகார நாட்களையே அபகரித்து அல்ல, வறியோரின் முகத்தில் வந்தமரும் புன்னகைகாக நெறியோடு உழைப்பதும், நேர்த்தியோடு நடப்பதும், உத்தமர்கள் வழியில் ஓய்வின்றி உழைப்பதுமே, கழகத் தொண்டனின் கடமை என்பதை வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் நம் வழித்துணை தெய்வமாம் அம்மாவின் பெயராலே சபதம் எடுப்போம். சத்தியத்தில் ஜெயிப்போம்.

எங்கள் உயிர் எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா வழியில் மக்களை காப்போம் என இந்நாளில் சூளுரை ஏற்போம்‘’ என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button