குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஓரணியில் திரண்ட பேரணி
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பேரணி அமைதியாக நடைபெற்று முடிந்தது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது.
அதன்படி நடைபெற்ற பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதாகைகளை ஏந்தியபடியும் முழக்கங்களை எழுப்பியபடியும் லேங்ஸ் தோட்ட சாலை, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பேரணி நிறைவு பெற்றது. அங்கு குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேடையில் நன்றியுரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடைபெற்றது பேரணி அல்ல, போர் அணி என்றார். பேரணியைத் தடுக்க முயன்று விளம்பரம் தேடித் தந்த அதிமுகவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் அப்போது கூறினார்.
இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்றபோதிலும், திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பேரணி நடைபெற்ற பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். 4 ட்ரோன்கள், 50 சிசிடிவி கேமராக்கள் மூலம் பேரணி கண்காணிக்கப்பட்டது. காவல்துறையினரால் 110 வீடியோ கேமராக்கள் மூலம் பேரணி படம் பிடிக்கப்பட்டது.
அசம்பாவிதங்களை தடுக்க வஜ்ரா வாகனங்கள், தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வருண் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் முன்னெச்சரிகையாக நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும், பேரணி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.
சென்னையில் திமுக நடத்திய பேரணிக்காக, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, லாரியைக் கொண்டு திடீர் மேடை அமைக்கப்பட்டது. பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் முடிவடைந்தவுடன், அங்கிருந்து கலைந்து செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் அங்கு மேடை அமைத்து, தலைவர்களை மேடையேற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெரிய லாரியின் டிரெய்லர் பகுதி கொண்டுவரப்பட்டு, உடனடியாக மேடை அமைக்கப்பட்டது.