உடல் ஆரோக்கியம் பெற வேண்டி ராமேஸ்வரத்தில் யாகத்தில் பங்கேற்ற விஜயகாந்த்
தேமுதிக அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் செந்திலின் திருமண நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ராமேஸ்வரத்தில் உள்ள தேமுதிக நிர்வாகி இல்லத்தில் விஜயகாந்த் உடல்நலம் பெறவேண்டி திலஹோமம் எனப்படும் யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் அவருடைய குடும்பத்தார் பங்கேற்றனர்.
வரக்கூடிய தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் விரும்புவதாக தெரிவித்து வரும் பிரேமலதா விஜயகாந்த், ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் இந்த முறை பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது என்றார். விரைவில் பொதுக்குழுவை கூட்டி தேமுதிகவின் நிலைப்பாட்டை தெரிவித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி, இறை வழிபாடு மூலமும் ஆரோக்கியம் பெறுவதற்கான யாகங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் ஒரு நாள் தங்கியிருந்து யாகத்தை நிறைவு செய்துள்ளார். அப்பொழுது அவர் தங்கியிருந்த இல்லத்தில் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா விஜயகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.