தமிழகம்

இரிடியம் மோசடியில் சிக்கிய சாமியார்..

வேலூர் மாவட்டமின்றி வடதமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பிரபலமாகி வரும் திருவலம் சாந்தா சாமிகள் என்ற சாந்தகுமார் மோசடி வழக்கில் கைதாகியுள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரிடியம் வாங்கி விற்க திட்டமிட்ட சாமியார், போலீசில் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பொதிகை நகரைச் சேர்ந்தவர் 50 வயதான கேசவமூர்த்தி. தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றில் உற்பத்தி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவருக்கு வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் சர்வமங்கள பீடம் என்ற பெயரில் கோவில் மற்றும் ஆசிரமம் நடத்தி வரும் சாந்தகுமார் என்ற சாந்தா சாமிகள் என்பவருடன் 2010ம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சில மாதங்கள் கழித்து, பெங்களூருவைச் சேர்ந்த கமலக்கார் ரெட்டி என்பவருடன் தான் பெரிய முதலீட்டில் ஒரு தொழில் செய்து வருவதாகவும், அதில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்றே மாதங்களில் 5 கோடி ரூபாய் தருவதாகவும் சாமியார் சாந்தகுமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பணத்திற்கு ஆசைப்பட்ட கேசவமூர்த்தியும், மனைவியின் நகைகள், கம்பெனி, வீடு உள்ளிட்ட சொத்துக்களை அடமானம் வைத்து 2010ம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை, சாமியார் சாந்தகுமாரிடமும் அவரது தொழில் பங்குதாரர் என்று அறியப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த கமலக்கார் ரெட்டி என்பவரிடமும் ரொக்கமாக 45 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார். அதன்பின் சாமியார் சாந்தகுமார் அந்தப் பணத்தை சொன்ன காலத்திற்குள் திருப்பிக் கொடுக்கவில்லை.

பணத்தைத் திருப்பிக் கேட்டபோது 2 முறை 50 லட்சம் ரூபாய் மற்றும் 55 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை சாமியார் கொடுத்துள்ளார்; ஆனால் அவற்றை வங்கியில் செலுத்தும் முன்பு பல காரணங்களைக் கூறி வாங்கிக் கொண்டதாக கேசவமூர்த்தி தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில், தன் மீது போலீசில் எஸ்பியிடம் புகார் கொடுத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டிய சாமியார் சாந்தகுமார் வாணியம்பாடி மாந்திரீகரிடம் கூறி சூனியம் வைத்து விடுவதாக மிரட்டியதாகவும் கேசவமூர்த்தி புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சாமியார் குறித்து விசாரித்த போது அவர் ரைஸ் புல்லிங் என்ற மோசடியைத் தொழிலாகவே நடத்தி வருவதாக தெரியவந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

திருவலம் சாந்தா சாமிகள் மீது அக்டோபர் முதல் வாரத்தில், ராணிப்பேட்டை ஆர்க்காட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பென்ஸ் பாண்டியன் மற்றும் அவரது உறவினர் ஹரீஷ்குமார் இருவரும், மொத்தம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
மூன்று பேர்களின் புகார்கள் குறித்தும், ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருவலம் பகுதியிலுள்ள சர்வமங்கள பீடத்தில் இருந்த சாந்தா சாமியார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில் சாந்தா சாமியார் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 44 வயதான சாந்தா சாமியார் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டில் அம்மன் சிலை வைத்து அருள் வாக்கு சொல்லி பக்தர்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார். ஆனால் கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சாந்தா சாமியார், மேலும் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டார்.

அப்போதுதான் பெங்களூருவைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி என்பவர் சாந்தா சாமியாருக்கு அறிமுகமாகியுள்ளார். சாமியாரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட கமலக்கார ரெட்டி, இரிடியத்தை வாங்கி விற்றால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டியுள்ளார்.

அதை நம்பிய சாந்தா சாமியார் தன்னிடம் வரும் பணக்கார பக்தர்களிடம் 10 லட்சம் கொடுத்தால் மூன்றே மாதங்களில் 5 கோடி ரூபாய் தருவதாகக் கூறி ஆசை காட்டி பணத்தைப் பறித்துள்ளார். பறித்த பணத்தில் தான் பாதியை வைத்துக் கொண்டு மீதிப் பணத்தை கமலக்கார ரெட்டியிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் கமலக்கார ரெட்டியுடன் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று பக்தர்களைச் சந்தித்துள்ளார் சாந்தா சாமியார். கடந்த 2010ம் ஆண்டு முதல் பக்தர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக சாந்தா சாமியார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து சாந்தா சாமியார் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர். வாலாஜாபேட்டையில் உள்ள நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்; நீதிபதி அவரை, 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதையடுத்து அரக்கோணத்தில் உள்ள சிறையில் சாமியார் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், பெங்களூருவைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆர்க்காட்டைச் சேர்ந்த புனிதவல்லி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

ஆன்மீகத்தின் பெயரால் லட்சக்கணக்கில் பணம் பறித்து இரிடியம் விற்கலாம் என திட்டமிட்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சாமியார் கைதான சம்பவம், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button