லஞ்ச வசூலில் சாதனை செய்யும் கோவை பத்திரப்பதிவு அலுவலகங்கள் : நடவடிக்கை எடுப்பார்களா ? அதிகாரிகள்…
தமிழக மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்று தீபாவளி பண்டிகை. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக தொழிளார்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு பண்டிகை செலவுகளுக்கு பண உதவி செய்து வருகிறார்கள். ஆனால் அரசு அலுவலங்களில் அரசு ஊழியர்கள் சம்பளம், போனஸ் இரண்டும் வாங்கியும் லஞ்சம் வாங்குவதை நடைமுறை வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் தான் சமீப காலமாக அரசு அலுவலங்களில் கணக்கில் வராத பணம் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைப்பற்றப்பட்டு வருகிறது.
கடந்த ஏட்டு மாத காலமாக கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும் முடங்கி மக்கள் பொருளாதாரம் இன்றி வருமையில் தவித்து வருகிறார்கள் ஆனால் சொத்துக்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகமாக பத்திரப்பதிவு செய்து சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது. பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் உண்மையான மதிப்பீடுகளை குறைத்து மதிப்பிட்டு பதிவு செய்யவருபவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசுக்கு வரவேண்டிய வருவாயை தடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களும் சமூக அலுவலர்களும் நம்மிடம் கூறுகையில்,
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மதுக்கரை, ஆணைமலை ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக அப்பகுதி மக்கள் புலம்புகிறார்கள். மதுக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவளாராக செல்லப்பாண்டியன் என்பவர் பணிபுரிந்துவருகிறார். இவர் பெரும்பாலான நேரங்களில் அலுவலகத்தில் இருப்பதே இல்லை. ஆனால் பத்திரப் பதிவுகள் தானாவே நடைபெறுகிறது. பத்திரம் எழுதும் கடை வைத்திருக்கும் இருவர் தான் பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் வசூல் செய்து இந்த அலுவலகத்தில் கடைநிலை ஊழியரான முத்திரை பதிவு செய்யும் பாலு என்பவரிடம் கொடுக்கிறார்களாம். சார்பதிவாளர் செல்லப்பாண்டியனுக்கு லஞ்சம் வசூல் செய்யும் பணியை பாலு சிறப்பாக செய்வதால் சார்பதிவாளர் செல்லப்பாண்டியன் பாலுவை பார்த்து விட்டீர்களா என்று கேட்ட பின்பு தான் பத்திரப் பதிவே செய்வராம். அதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் முதல்பத்திரம் எழுதும் தொழில் செய்பவர்கள், புரோக்கர்கள் என அனைவரும் கடைநிலை ஊழியராக இருக்கும் பாலுவுக்குத்தான் பயப்படுகிறார்களாம்.
சார்பதிவாளர் செல்லப்பாண்டியன் எங்கு பணிமாறுதல் ஆகி சென்றாலும் பாலுவும் அந்த இடத்துக்கு பணிமாறுதல் பெற்றுசென்றுவிடுவாராம். அதே போல் ஆணைமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவளார் வருவதே குறைவான நேரம்தான் ஆனால் பத்திரப்பதிவு மட்டும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் நடைபெறுகிறது. பொள்ளாச்சி சார்பதிவளார் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த அலுவலகத்தில் சார்பதிவளார் இடையிடையே காணாமல் போய் விடுவராம். இவரைப்பற்றி கேட்கையில் சார் வந்து விடுவார் காத்திருங்கள் என்று சக ஊழியர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் சார்பதிவாளரோ இடைத்தரகர்களிடம் வாங்கும் பணத்தை உடனுக்குடன் தனக்கு சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பதற்காக வெளியில் சென்று வருவதாக விசாரனையில் தெரியவந்துள்ளது. இவர் பெரும்பாலும் போனில் யாரிடமும் பேசுவதில்லையாம்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி லஞ்சமாகப் பெற்ற பணத்தை கைப்பற்றி காரணமான அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொள்ளாச்சி, மதுக்கரை, ஆணைமலை ஆகிய மூன்று பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஏனோ இதுவரை சோதனை நடத்தவில்லை. இதுகுறித்து மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு நேரடியாக பொதுமக்களே புகார்களை அனுப்பி இருக்கிறோம்.
மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரியின் மேற்கண்ட மூன்று அலுவலகங்களிலும் நடைபெறும் லஞ்ச வேட்டையை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- சாகுல் ஹமீது