ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்
கடந்த மே மாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் முடிவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. விசாரணையின் போது தீர்ப்பாய உத்தரவின் படி அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆலை மற்றும் சுற்றுவட்டாரங்களை ஆய்வு செய்தது.
பின்னர் அக்குழு அளித்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இதை தமிழக அரசு எதிர்த்தது. இது தொடர்பான வழக்கில், ஆலை விவகாரத்தில் ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவும் சரியான ஆய்வை மேற்கொள்ள தவறிவிட்டது. ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அடுத்த ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவேண்டும், ஆலையை திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆட்சியார் செய்து தரவேண்டும், பாதுகாப்பு அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்தது.இதனிடையே பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் தங்களை விசாரிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்ககூடாது என்று ஸடெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள மாசுக்கள் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா தொடர்ந்திருக்கும் இந்த மனுவில், வேதாந்தா குழுமத்தின் மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்திருக்கவே முடியாது என்றும் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு தனது மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு பிறப்பித்த அரசாணை என்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான அதிகாரமே கிடையாது என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கைக் காரணம் காட்டித் தற்போது வேதாந்தா நிறுவனத்துக்குத் தடை விதித்துள்ளது மாசுக் கட்டுப்பாடு வாரியம்.
பராமரிப்புக் காரணங்களுக்காகக் கூட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெளிவு படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்னரே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா அளித்த மனு மீதான விசாரணையை ஜனவரி 8-ம் தேதி எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகப் பேரவையில் ஜனவரி 6-க்குள் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாட்ஸ் அப் மூலம் தகவல்களைப் பரப்புவோர் மீது விசாரணை என்ற பெயரில் தனிமனித உரிமைகளில் போலீஸார் தலையிட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் ஒரேநிலையில் உள்ளனர். எனவே, அந்த ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில், நடைபெறவுள்ள தமிழகப் பேரவைக் கூட்டத் தொடரில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இல்லையெனில், தூத்துக்குடி மக்கள் சார்பில் அனைத்து அமைப்புகளும், பொதுமக்களும் சேர்ந்து மீண்டும் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஜனவரி 7-இல் அறிவிக்கப்படும் என்றார் அவர்.