மருத்துவ படிப்பு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு : விரைந்து சட்டம் இயற்ற உத்தரவு
மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீட்டின் அளவு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதேசமயம், இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதம் ஏற்க முடியாதது என்றும், மாநில இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என மருத்துவ கவுன்சிலில் எந்த விதிகளும் இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத பிற கல்வி நிலையங்களில் இத்தகைய ஓபிசி இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மத்திய – மாநில அரசுகளின் சுகாதார துறை அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும், மூன்று மாதங்களில் அதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, அகில இந்திய மருத்துவ சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க 3 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ பி சி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டிற்கான உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து, மத்திய அரசு மேல் முறையீடு செய்யாது என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3 மாதத்தில் மத்திய அரசு குழு அமைத்து இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை, இதை சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர்