தமிழகம்

தடுமாற்றத்தில் தனியரசு யாருடன் கூட்டணி…

2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தனியரசு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தனியரசு, தொகுதி மாறி காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த தனியரசு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த போதும், தனியரசு சசிகலாவிற்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தனியரசு எந்த கூட்டணியில் இடம் பெறுவது என இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளார்.

அதிமுக கூட்டணியில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக உள்ளதால், அவருக்கு எதிராக வேறு ஒரு கூட்டணியில் இடம் பெற்றால் கொங்கு பகுதியில் மக்கள் செல்வாக்கு குறைந்துவிடும் என்பதால், அதே கூட்டணியில் தொடரலாமா என தனியரசு யோசிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் முதல்வர் வேட்பாளரே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் தனியரசு கூட்டணிக்கு தேவையில்லை என்று இபிஎஸ் முடிவு எடுத்தால், பாஜக எதிர்ப்பு அரசியலை காரணம் காட்டி கூட்டணியை விட்டு வெளியேறி வேறு கூட்டணியில் இடம்பெறலாம் என்ற முடிவில் தனியரசு இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சசிகலா விடுதலைக்கு பின், அதிமுக பிளவுபட்டு அமமுக வலுப்பெற்றால், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள தனியரசு, சசிகலா, தினகரன் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறலாம் என்ற மற்றொரு யோசனையிலும் அவர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொங்கு மண்டலத்தில் எடப்பாடியை வீழ்த்த, திமுக பல்வேறு வியூங்களை வகுத்து வருகிறது. ஈஸ்வரன் தலைமையிலான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முடிவில் திமுக உள்ளது. இந்தநிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் பாஜகவிற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை காரணம் காட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாமா என ஆதரவாளர்களிடம் தீவிர ஆலோசனையிலும் உள்ளாராம் தனியரசு.

மூன்று பக்கமும் சாயும் மனநிலையில் உள்ள தனியரசு, கடந்த 30ஆம் தேதி தேவர் குருபூஜைக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அதேபோல் பசும்பொன் வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் தினகரனை, அமமுக நிர்வாகி கரிகாலன் வீட்டில் சந்தித்து சால்வை அணிவித்து, தினகரனுடன் ஆலோசனை செய்துள்ளார்.

தேவர் குருபூஜைக்கு வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலினை காரில் வரும் வழியில் சந்தித்த தனியரசு, அவருக்கும் சால்வை வழங்கி மரியாதை செய்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என முடிவு எடுக்க முடியாமல், மூன்று பக்கமும் ஒரே நேரத்தில் கூட்டணிக்காக தனியரசு துண்டு போட்டு வைத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வெற்றிவேல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button