திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன் பொதுவாக கல்யாண பத்திரிகையில் ஒன்று போடுவார்கள். இந்த தேதியில் என்னுடைய மகளுக்கும், இன்னாருடைய மகனுக்கும் இங்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அனைவரும் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என போடுவார்கள். அதேபோல் நானும் அவ்வண்ணமே இங்கு வந்திருப்பவர்களை வரவேற்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் எங்களது செயல்பாட்டுக்கு, ஆதரவளிக்கிறீர்கள் என்று பொருள். தப்பித்தவறி அதிமுக வெற்றி பெற்று விட்டால் நூறுநாளில் திமுகவின் சாயம் போய் விட்டது. திமுக ஆட்சி அவ்வளவுதான் என்று அதிமுகவினர் புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த தேர்தலில் அதிமுக தோற்றுவிட்டால் அடுத்து வர உள்ள சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய தேர்தல்களில் போட்டியிடக்கூட அவர்களுக்கு தைரியம் வராது, ஒரு பதவியை இருபது பேர் கேட்கிறார்கள். அதில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்க முடியும். மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும். பொதுச்செயலாளர், சட்டமன்ற முன்னவர் என்கிற முறையில் அவர்களுக்கெல்லாம் நான் ஒரு உறுதியைத் தருகிறேன். இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் கலைத்துவிடுவோம். அதற்கான கையெழுத்தும் போடப்பட்டு விட்டது. தேர்தல் காலத்தில் அறிவிக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. எனவே தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மூன்றாவது நாள் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் கலைக்கப்படும்.
சர்க்கரை ஆலைகள், பால்வளம், உள்பட அனைத்தும் கலைக்கப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களை உடனே நடத்த வேண்டாம். இரண்டாண்டுகள் கழித்து பார்த்துக் கொள்ளலாம். நமது கட்சியினர் அந்த இடங்களில் அமரவேண்டும். கண்டவனெல்லாம் கூட்டுறவு தலைவர் என்கிறான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்காவது நமது கட்சியினர் கூட்டுறவு தலைவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஆத்திரம் அடங்கும் என தலைவரிடம கூறியிருக்கிறேன். எனவே உள்ளாட்சித் தேர்தலில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படவில்லையோ, அவர்களுக்கெல்லாம் உரிய பதவிகள் வழங்கப்படும். யாரும் அவசரப்படாதீர்கள். கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நானே கட்டம் கட்டிவிடுவேன்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அடித்தால்கூட வாங்கிக் கொள்வேன். உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கட்சிக்குத் துரோகம் செய்கிறவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்த துரைமுருகன் நினைத்தால் 24 மணி நேரத்தில் கட்டம் கட்டிவிடுவேன். எத்தனை காலத்திற்குத்தான் துரோகிகளையே பார்த்துக் கொண்டிருப்பது. அண்ணாதுரை காலத்தில் சம்பத்தை பார்த்தோம். அதன்பின் எம்ஜிஆரைப் பார்த்தோம். அதன்பிறகு வை.கோபால்சாமியை பார்த்துள்ளோம். இனிமேல் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். கட்டுப்பாட்டுடன் இருங்கள் நமக்குத் தெரியாத தேர்தல் வித்தைகள் இல்லை.
மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர் மூலமாக பட்டியல் பெறப்பட்ட பின் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்டாதவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களிலும், வாரியங்களிலும் உரிய பதவிகள் வழங்கப்படும் என்று பேசினார் அமைச்சர் துரைமுருகன்.
தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக கட்சியின் நிர்வாகிகள் இவ்வாறு பேசுவது வாடிக்கைதான் என்று பார்க்கப்பட்டாலும், தற்போது திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவை விமர்சனம் செய்ததை மூத்த அமைச்சராக இருக்கும் துரைமுருகன் தவிர்த்திருக்கலாம். மேலும் கூட்டுறவு சங்கங்களை கலைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கலைக்கப்படும் என பேசியதால் துரைமுருகன் ஆணவத்தில் பேசியதாகவே அனைவராலும் பேசப்படுகிறது.