தமிழகம்

அதிர்ச்சி அளிக்கும் காகிதம் ராஜன் மரணம்… : கொலை களமாக மாறிய மருத்துவமனை..!

மனிதர்களை கொரோனா ஒரு பக்கம் கண்ணுக்கு தெரியாமல் கொல்கிறது. கண்ணுக்கு தெரிந்தே சில மருத்துவர்கள் மனிதநேயமற்று கொல்கிறார்கள்.


சபாநாயகர் காளிமுத்துவின் உதவியாளராக இருந்தவர் தான் ராஜன். அதிமுகவில் இருந்தாலும் அங்கு உள்ள குறைகளை சுட்டிக் காட்டி பல எதிர்ப்புகளை சந்தித்தவர் தான் ராஜன். அச்சு ஊடகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பேசுவார். பத்திரிகையாளர்கள் பலருடனும் கருத்துக்களால் மோதல் ஏற்படும். ஆனால், தன்னிலையில் இருந்து பின்வாங்கியது இல்லை. காகிதம் என்ற அமைப்பு மூலம் பல வெளிப்படையான கருத்துக்களை பதிவு செய்தவர். தலைமைச்செயலகத்தில் காகிதம் ராஜன் கால் படாத இடங்களே இல்லை. அங்குள்ள அனைவரும் அறிந்த ஓர் மூத்த பத்திரிகையாளர்.

நேற்று நல்லா தான் இருந்தார். என்னிடம் கூட பேசினார். திடீரென இறந்துவிட்டார். இப்படி அதிகமாக பேசப்படும் மரணங்கள் பல மாரடைப்பு மரணம் தான். மருத்துவமனை உடனடி சிகிச்சை மூலம் மட்டுமே பலர் உயிர் பிழைத்துள்ளனர்.

14-.07-.2020 அன்று இரவு 9 மணி அளவில் காகிதம் ராஜன் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருக்கும் தாம்பரம் முடிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையான AG HOSPITAL க்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.

நோயாளிக்கு சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர்கள், முதலுதவி சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார்கள். ஏன்? என்ற கேள்விக்கு, கொரானாவை காரணமாக கூறியுள்ளார்கள்.

கொரோனா பரிசோதனை செய்த பின்பு தான் எந்த சிகிச்சையும் அளிக்க முடியும் என்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வந்த காகிதம் ராஜனுக்கு உதவ மறுத்துள்ளார்கள்.

அதன் பிறகு மீண்டும் இன்னொரு ஆம்புலன்ஸ் மூலம், தனது ஒரு மகளுடன் சென்றுள்ளார். ஆம்புலன்ஸில் சென்றவர் திரும்ப வருவார் என்று குடும்பத்தினர் காத்திருக்க காகிதம் ராஜன் உடல் மட்டுமே திரும்ப வந்தது. கொரோனா பரிசோதனை செய்ய அழைத்து செல்லும் வழியிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தனது மகள் கண்ணெதிரே தந்தை உயிர் பிரிந்தது. ஊருக்கே செய்தி கூறும் பத்திரிகையாளர் ஒருவர், மருத்துவர்களின் அலட்சியத்தால் மரணமடைந்தார். இதையும் ஓர் கொலை என்று தான் சொல்ல வேண்டும். முதலுதவி சிகிச்சை மூலம் நெஞ்சுவலியை குணப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதை செய்யாத காரணத்தால் தான் இறந்துவிட்டார்.

உடனடியாக சிகிச்சை செய்து காகிதம் ராஜனை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், உயிர் காக்கும் மருத்துவர்கள், கொரோனாவை காரணம் காட்டி பத்திரிகையாளரை கொன்று விட்டனர்.

காகிதம் ராஜன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “மாலை தமிழகம்” நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்த ராஜன் இறப்புச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இணைப்பு பாலமாக இருந்து வரும் பத்திரிகை துறையில் செய்தியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி “டாக்டர் நமது எம்ஜிஆர்”, “மக்கள் குரல்” உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்களில் 20 ஆண்டுகளாக பணியாற்றியவர். பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் குடும்ப உதவி நிதி மறைந்த செய்தியாளர் ராஜன் குடும்பத்திற்கு அரசின் விதி முறைகளுக்குட்பட்டு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி தனது இரங்கல் செய்தியில் கூறியிருக்கிறார்.

காகிதம் ராஜன் மரணத்திற்கு AG HOSPITAL அலட்சியமே காரணம். இவர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருபுறம், கொரானா தொற்று ஏற்பட்டு மரணம் ஏற்பட கூடாது என்று மருத்துவர்கள் பாடுபட்டு வருகிறார்கள், மருத்துவர் ஓர் தெய்வம். மருத்துவமனை ஓர் கோவில் என்று அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில், இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது, சாத்தான்களும் உள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மருத்துவர் கொலைகாரர்களாகவும், மருத்துவமனை கொலை களமாகவும் மாறிய பெரும் சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. கடந்த மாதம் 25 ஆம் தேதி அன்று மதுரை வடமலையான் மருத்துவமனையில் நெஞ்சுவலி ஏற்பட்ட பாலுச்சாமி என்பவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாலுச்சாமி ஒர் சுகாதார துறை ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..

உயிரிழந்த இரண்டு நபர்களுக்கும் மருத்துவர்கள் முதலுதவி அளித்திருந்தால் இருவரும் உயிர் பிழைத்து இருப்பார்கள். மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் இரண்டு உயிர்கள் பறிபோய் இருக்கிறது. இருவரின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது.

  • அ.ராபர்ட்ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button