அரசு பள்ளி ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு, மூன்று தனிப்படை அமைத்தும் சிக்காத குற்றவாளிகள் !

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருபவர் ஆசிரியர் முகமது குலாம் தஸ்தகீர் (46). நேற்று மாலை சுமார் 6 மணியளவில் பள்ளியில் இருந்தபோது, மர்ம நபர்கள் இவர்மீது பெட்ரோலை ஊற்றிவிட்டு தப்பிச் சென்றதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் காட்டுத் தீயாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருவதாக கூறுகின்றனர். மேலும் இது சம்பந்தமாக காவல்துறையினர் முகமது குலாம் தஸ்தகீரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்த வாக்கு மூலத்தில், பள்ளியின் கழிவறைக்கு சென்றபோது, பின்புறம் சத்தம் கேட்டதாகவும், தான் சுவர் ஏறி பார்த்தபோது நான்கு நபர்கள் மது குடித்துக்கொண்டு இருந்ததாகவும், இவர் அவர்களை கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பள்ளியின் மெயின் கேட் வழியாக நான்கு நபர்கள் உள்ளே வந்து தன்மீது பெட்ரோல் ஊற்றிவிட்டு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

ஆசிரியர் வாக்குமூலத்தில் கூறியபடி, போலீசார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடங்களுக்குச் சென்று பார்த்தபோது, பள்ளிக்கு பின்புறம் முட்புதர்கள் நிரம்பியுள்ளது. அந்த இடத்திற்கு வர வேண்டுமானால் நீண்ட தூரம் சுற்றித்தான் வரமுடியும். இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த இடத்திற்கு வந்து மது குடிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ? ஆசிரியரின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறதே ? வேறு ஏதேனும் முன்பகை காரணமாக இருக்குமா ? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக அப்பகுதியினர் மத்தியில் கேட்டபோது.. ஆசிரியர் குலாம் காரத்தூர் அரசுப்பள்ளியில், கடந்த இருபது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்த பள்ளியின் வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது. தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கிராமப்பகுதிகளுக்கு நேரடியாக சென்று பெற்றோர்களிடம் பேசி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியதோடு, பல ஏழை, எளிய மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் கணியூர் வெங்கட கிருஷ்ணா அரசு உதவிபெறும் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கும், ஆசிரியர் குலாமுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறும் நடந்துள்ளது. வருடாவருடம் மாணவர் சேர்க்கையின் போது இந்த பிரச்சினை நடந்து வந்துள்ளது. அந்த தனியார் பள்ளியில் மாணவர்கள் குறைவாக இருப்பதால், ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தனியார் பள்ளி நிர்வாகத்தினர், அரசுப்பள்ளி ஆசிரியர் குலாம் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்கிற சந்தேகமும் அப்பகுதியினர் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஆசிரியர் குலாமின் கார் விபத்துக்குள்ளாகி, படுகாயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறார். இது சம்பந்தமான வழக்கும் நடந்து வருகிறது. சில மாதங்களிலேயே தற்போது பொட்ரோல் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்தும் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை என்பதிலும், அரசியல் தலையீடுகள் இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் மீது போலீசார் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு, குற்வாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கா. சாதிக்பாட்ஷா