அரசியல்

விவரம் தெரியாமல் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் எடப்பாடி..! : துரைமுருகன் எச்சரிக்கை

இப்படி விவரம் தெரியாம பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டாம், பலமுறை விவரமாக சொல்லி எங்களுக்கே அலுத்துப் போச்சு. அவர்களுக்கும் கேட்டு,கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும் என கேள்விகேட்டு முதல்வர் எடப்பாடியை எச்சரித்துள்ளார் துரைமுருகன்.

பல ஆண்டுகாலம் தமிழகத்தின் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், எந்தத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தினார். திமுக ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன? மேட்டூரிலிருந்து கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து வைத்திருக்கிறீர்கள் என முதல்வர் எடப்பாடி கேள்விகேட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த துரைமுருகன்; மாண்புமிகு முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபகாலமாகஒரு வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். எந்த ஊருக்கு போனாலும், எந்த விழாவில்உரையாற்றினாலும், தி.மு.க. ஆட்சியில் காவேரி – முல்லைப் பெரியார் பிரச்சினையில் என்ன செய்தது என்று கேட்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் எத்தனையோ முறை முதலமைச்சரும் – மற்ற அமைச்சர்களும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டபோதெல்லாம், நாங்கள் பலமுறை விவரமாக கூறி எங்களுக்கே அலுத்துப் போய்விட்டது. அவர்களுக்கும் கேட்டு, கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும்.

ஆனாலும், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், விழாக்கள் தோறும் இதே கேள்வியை கேட்டு வருகிறார். அப்படித்தான் சேலம் வீரபாண்டி தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போதும், “தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக அதிககாலம் இருந்தவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன். காவேரி – முல்லைப் பெரியார் -பாலாறு பிரச்சினைகளுககு எந்த தீர்வும் காணாதவர்” என்று பேசியிருக்கிறார். அதாவது, கலைஞர் அரசு இந்தப் பிரச்சினைகளில் எதுவும் செய்யவில்லை என்கிறார்.

காவேரியாற்றில் வரும்தண்ணீரை கர்நாடகமும் – தமிழகமும் எப்படி பகிர்ந்து கொள்ளுவது என்பது குறித்து 1924ஆம் ஆண்டு, இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. காலப்போக்கில் கர்நாடக அரசு, ஒப்பந்தத்தை மீறி நடக்க ஆரம்பித்தது. தமிழகத்துக்கு அதனால் கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக எழுப்பியவர், அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் தான். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமாக இதைக் கொண்டு வந்ததும் கலைஞர் தலைமையிலான தி.மு.க.அரசு தான். காவேரியில் மொத்தம் எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை கண்டுபிடிக்க ‘உண்மை கண்டறியும் குழு’வை கொண்டு வந்தவரும் கலைஞர் தான்.

முல்லைப் பெரியாறு அணையில்152 அடி தேக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க.ஆட்சியில்தான் யாரையும் கேட்காமலும் -அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலும் -அன்றைய அ.தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த திரு.ராஜாமுகமது அவர்களின் கையெழுத்து இல்லாமலும், “152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துக் கொள்வோம்“ என ஒரு அடிமை முறி சீட்டை கேரள அரசுக்கு எழுதி கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான். முல்லைப் பெரியாறு அணையில்142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றுஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெற்றுத்தர வித்திட்டது தி.மு.க. அரசுதான்.

2013-&14 ஆம் ஆண்டு முதல் 2018-&19ஆம் ஆண்டு வரையிலான இந்த ஆறுஆண்டில் பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்ட பணம், பாசனத்திற்கென மொத்த ஒதுக்கீடு 13,606 கோடி ரூபாய். ஆனால், மொத்தம் செலவு செய்ததோ 6,973கோடி ரூபாய்தான். இதை நான் குற்றமாகசொல்லவில்லை. 2018ஆம் ஆண்டை தணிக்கை செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின்அறிக்கை – 2019ல் தெளிவாக தெரிவித்திருக்கிறது. இதையெல்லாம் படித்துவிட்டு அவர் பேசுவது நல்லது என துரைமுருகன் பதில் அளித்திருக்கிறார்.

  • எம்.யூ.அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button