பல்லடம் திமுக-விற்கு “தமிழகம்” விதிவிலக்கா !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகரின் பிரதான நகராட்சிக்கு எதிரே எழுதியுள்ள சுவர் விளம்பரத்தில் தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘தமிழகம் ‘ என்கிற வார்த்தையை தவிர்த்துவரும் நிலையில் பல்லடம் சுவர் விளம்பரம் விவாதப் பொருளாகியுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு தினமான, ஜன.,1ல், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும், ‘தலை நிமிர்ந்த தமிழகம், மனங்குளிருது தினந்தினம்’ என்ற வாசகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஜனவரி 4ம் தேதி, கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ரவி, ‘தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும்’ எனப் பேசியது, பெரும் சர்ச்சையானது.
அவருக்கு எதிராக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கொந்தளித்தன. திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி வந்த தி.மு.க., ‘தமிழ்நாடு வாழ்க’ எனக் குரல் எழுப்ப துவங்கியது. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க., தன் விளம்பரத்திலும், ‘தமிழகம்’ என்ற வார்த்தைக்கு பதிலாக, ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையை பயன்படுத்த துவங்கி உள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தி.மு.க., வெளியிட்ட விளம்பரத்தில், ‘தலை நிமிர்ந்த தமிழ்நாடு தனித்துவமான பொன்னாடு’ என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் பல்லடம் நகராட்சிக்கு எதிர்புறமாக எழுதியுள்ள சுவர் விளம்பரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டுவரும் நிலையில் சுமார் 200 அடிக்கு மேல் உள்ள சுவர் விளம்பரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து திமுக கட்சியினர் எழுதியுள்ள சுவர் விளம்பரம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழகம் என்ற சொல்லை பயன்படுத்த பல்லடத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதா என்கிற கேள்வியையும் பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.