பழனி நகர் முழுவதும் தேரில் வலம் வந்த முத்துக்குமாரசாமி !
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு தேரை வடம்பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்துச் சென்றனர்.
பழனி முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 29 ஆம் தேதி உபகோயிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து ஏழாவது நாளில் பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படும். இரு தினங்களுக்கு முன் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இவ்விழாவையொட்டி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான பக்தர்கள் தீர்த்தக் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
இவ்விழாவில் சிகர நாளில் அதிகாலை 4.30 மணியளவில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானையுடன் சண்முக நதியில் தீர்த்தவாரி எழுந்தருளினார். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் தேரில் எழுந்தருளி முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானையிடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதன்பிறகு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவிலின் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். பக்தர்கள் அரோகரா என பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது கோவிலின் கஸ்தூரி யானை அலங்கரிக்கப்பட்டு தேரின் பின்னால் நகரின் அனைத்து முக்கிய வீதிகளிலும் வலம் வந்தது. அப்போது முத்துக்குமாரசாமி வள்ளி. தெய்வானையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.