சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான ‘வேதா நிலையத்தை’ நினைவு இல்லமாக மாற்றுவதாக கடந்த ஆகஸ்டு 17-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் ஜெ.தீபக் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டது. வேதா நிலையத்தை நினைவில்லமாக்குவதால் அந்த பகுதியில் ஏற்படும் தாக்கம் குறித்து அறிவதற்காக ‘சமூக தாக்க அறிக்கை’ தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த பணி சென்னை சமூக பணி கல்லூரியிடம் (எம்.எஸ்.எஸ்.டபிள்யூ) ஒப்படைக்கப்பட்டது. ‘சமூக தாக்க அறிக்கை’ தயாரிப்பு திட்ட இயக்குனர் உதவி பேராசிரியர் ஏ.ஏனோக் தலைமையில், குடிசைமாற்று வாரிய ஓய்வுபெற்ற அதிகாரி எஸ்.பாண்டியன், வக்கீல் என்.லலிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த பணியில் ஈடுபட்டனர். போயஸ்கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த கலந்தாலோசனை கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில் அந்த பகுதிகளை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 90 சதவீதம் பேர் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருத்து தெரிவித்தனர். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக 108 பேரின் கருத்துகள் அடங்கிய கடிதங்கள் ‘சமூக தாக்க அறிக்கை’ குழுவினரிடம் வழங்கப்பட்டது.
பேலா கோத்தாரி என்ற பெண் கூறும்போது, “ஜெயலலிதா தனிமையை மிகவும் விரும்புபவர். அவர் வாழும்வரை எங்களுக்கு மிகுந்த பாதுகாப்பாக இருந்தார். அந்த பகுதி மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டது. தற்போது குப்பைகள் முறையாக அள்ளப்படுவது இல்லை. குடிநீரும் தட்டுப்பாடாக உள்ளது. மின்சாரமும் அவ்வப்போது தடைபடுகிறது. வேதா நிலையம் நினைவு இல்லமாக ஆக்கப்படும்போது, சிறிய கடைகள் தோன்றுவதுடன் பொதுமக்கள் அதிகம் வருவார்கள். இதனால் சாலைகளில் குப்பைகள் அதிகரிக்கும். மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும்” என்றார்.
வித்யா என்பவர் கூறும்போது, “வசிப்பிட பகுதியில் பொது நினைவிடம் அமையும்போது அது எல்லோருக்கும் இடையூறாக அமையும். கூட்ட நெரிசல் ஏற்படுவதால் அங்கு வசிப்பவர்களுக்கும் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும். எனவே, இதுபோன்ற நினைவு இல்லத்தை பொது இடங்களில் வைப்பது தான் நல்லது” என்றார்.
பாலசுப்பிரமணியன் என்பவர் கூறும்போது, “போயஸ் கார்டன் பகுதி அனைத்தும் ஒருவழிப் பாதையை கொண்ட குறுகலான சாலைகளை உடையது. வேதா நிலையம் நினைவில்லமாக ஆக்கப்படும்போது, வாகன போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் இடையூறு ஏற்படும்” என்றார்.
பிரிதிவிராஜன் என்பவர் கூறும்போது, “ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக்கப்பட வேண்டும். தலைவர்கள் வாழ்ந்த வீடுகளை தான் நினைவு இல்லமாக ஆக்குவார்கள். எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு எப்படி நினைவு இல்லமாக்கப்பட்டது. அதை தற்போது ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். போக்குவரத்து நெருக்கடி மற்றும் பாதுகாப்பு குறைபாடு என்று கருதினால், ஒரு நாளைக்கு இத்தனை பேர் தான் நினைவு இல்லத்தை பார்க்க முடியும் என்ற கட்டுப்பாடு விதித்து இடையூறுகளை களையலாம்” என்றார்.
அந்த பகுதியின் முன்னாள் கவுன்சிலர் சிவராஜ் கூறும்போது, “ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
திட்ட இயக்குனர் ஏ.ஏனோக் கூறும்போது, “ஜெயலலிதா இருந்தவரை அவர்களுக்கு அதிகபட்சமான பாதுகாப்பு இருந்தது. பொது இடமாக மாற்றும்போது இடையூறுகள் தோன்றும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார்.