தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும் தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர் பெரியார்
தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார் என்று மூத்த ஊடகவியலாளர் ப. திருமாவேலன் பேசியுள்ளார்.
22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் பேசும்போது, “இந்தி மொழியால் தமிழ்க் கெட்டுவிடும் என்று நான் வருத்தப்படவில்லை. இந்தி மொழியால் மட்டுமல்ல, வேறு எந்த மொழியாலும் நம் மொழி கெட்டுவிடாது. ஆனால், நான் இந்தி மொழியை எதிர்க்கக் காரணம், இந்தியால் நம்முடைய கலாச்சாரம் அடியோடு அழிந்து விடும். இப்போதே வடமொழி நாட்டில் புகுந்து, நம்முடைய கலாச்சாரம் எவ்வளவோ கெட்டுவிட்டது. அதற்காக நாம் இந்தியை எதிர்த்துப் போராடவேண்டியது இருக்கிறது’’ என்று, 1948 இல் இந்தித் திணிப்பை தமிழர்களின் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்பாக உருவகப்படுத்தியதைப்போல, ஒரு தமிழ்த் தேசிய சிந்தனை என்பது இருந்திருக்க முடியுமா?
‘‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆரியம் ‘‘சமயத்’’ துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலேயே, தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை, குறைந்துவிட்டது’’ என்று, தனது இறப்புக்கு ஓராண்டிற்கு முன்பு 1972 இல் சொன்னவர் தந்தை பெரியார்.
தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால், நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும்
தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழி கலப்பால், இடது கை போல பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்குக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத் தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று சொல்லி, தனித்தமிழ் இயக்கத்தினுடைய சிந்தனையை தனது சிந்தனையாக சொன்னவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
‘‘நம்முடைய பண்டைய திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிடவேண்டுமானால், ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும்தான் நாம் சிறந்த அறிவாளிகளாகச் சொல்ல முடியும்‘’ என்று, பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், அவ்வையாரும்தான்.
‘‘மொழி உணர்ச்சியில்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைப்போ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததியினருக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்யவேண்டுமானால், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்‘’ என்று தன்னுடைய மரணத்திற்கு ஓராண்டிற்கு முன்பு சொன்னவர் தந்தை பெரியார்.
இப்படி தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார்.
தமிழ்த் தேசியத்தினுடைய ஆட்களினுடைய பரப்பு ரையில், நம்மவர்களுக்கே ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது; ஒருவேளை பெரியார், தமிழுக்கு எதிராக இருந்தாரோ, தமிழினத்திற்கு எதிராக இருந்தாரோ என்று, சில இளைஞர்களுக்கு அதுபோன்ற மயக்கங்கள் ஏற்படு கின்ற சூழ்நிலையில், பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து நாடெங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய காலகட்டமாக இந்தக் காலகட்டம் அமைந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியத்தினுடைய கூறுகளை, பெரியாரிடம் தமிழ்த் தேசியக் கூறுகள் எத்தனை இருக்கின்றன என்பதை நான் பட்டியலிட்டபோது, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிந்தனைகள், தமிழருடைய இனப் பெருமை, தமிழ்நாட்டினுடைய பெருமை, தமிழர்களின் கடந்த கால பெருமை, தமிழ்ப் பெருமை, தமிழுக்கு முதன்மை, நாட்டின் பெயர் தமிழ்நாடு, தனித்தமிழ்நாடு, வடமாநிலத்தவர் எதிர்ப்பு, மலையாள, ஆந்திரர், கன்னடர் எதிர்ப்பு, இந்திய அரசு எதிர்ப்பு, தமிழே ஆட்சி மொழி, தமிழே பயிற்று மொழி, தமிழே வழிபாட்டு மொழி, தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும், தமிழ்நாட்டில் தமிழனே வாழவேண்டும், சமஸ்கிருத எதிர்ப்பு, மார்வாடி எதிர்ப்பு, ஈழத் தமிழர் நலன், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மொழிவாரி மாகாண ஆதரவு, தட்சணப் பிரதேச எதிர்ப்பு, வடவர் சுரண்டல் எதிர்ப்பு, திருக்குறள் பரப்புதல், மூடப் பண்டிகைகளுக்கு எதிர்ப்பு, வடவர் பழக்க வழக்கங்களுக்கு எதிர்ப்பு, தமிழர் விழாக்களுக்கு ஆதரவு, பொங்கல் திருநாளே தமிழர் திருநாள், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய கொள்கை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழ் தொழி லாளர் நலன், தமிழ் முதலாளிகள் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், தமிழர்களுக்குள் பிரிவினை இல்லை, ஜாதி எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர் ஒற்றுமைக்கு வலியுறுத்தல், தமிழர் என்ற சொல்லாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனவே, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை நீங்கள் நன்றாக அடையாளம் காணுங்கள் என்று தன்னுரையை நிறைவு செய்தார்.