அரசியல்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன்பு பட்டியலிட பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.

அதில் அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்“ என கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார்மீது விசாரணை நடத்தியதாகவும் அதில் எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1996-ல் திருத்தங்கல் நகர பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது” என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதைத் தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு, பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

எனவே இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன்பாக பட்டியலிடவும் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன்பு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட, உயர்நீதிமன்ற பதிவாளர் தலைமை நீதிபதியின் அனுமதி பெற வேண்டும்.

  • நீதிராஜ பாண்டியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button