கொரோனா எண்ணிக்கை குறைந்தாலும், ஆபத்து குறையவில்லை… – மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?
கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடங்கி இருக்க கூடிய நிலையில் இதற்கு ஒரே தீர்வு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதுதான். அதற்கான பல்வேறு முயற்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல் முறையாக சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழக ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு விலங்குகளுக்கு பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து அதற்கான ஆராய்ச்சிகள் பரிசோதனைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. உலக அளவில் 196 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் 42 ஆராய்ச்சிகளில் மனித சோதனை செய்யும் அளவிற்கு முன்னேறி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையமும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜூன் மாதம் முதல் ஈடுபட்டு வருகிறது. தடுப்பு மருந்தின் முதற்கட்ட சோதனைகள் முடிக்கப்பட்டு அதன் ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு அனுப்பப்பட்டது.
இதை ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆர் முதற்கட்டமாக பிரீ கிளிக்கல் ட்ரயல் என்று சொல்லக்கூடிய விலங்குகளிடம் அந்த மருந்தை பரிசோதனை செய்ய அனுமதியை வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சிறு விலங்கினங்கள் ஆன முயல், எலி போன்ற விலங்குகளிடம் இந்த மருந்து பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக மனிதர்களிடம் இந்த மருந்து சோதனை செய்ய அனுமதி பெறப்படும்.
அதே போன்று இந்தியாவில் தயாராகியுள்ள மற்றொரு கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் சோதனை தற்போது இரண்டாம் கட்ட மனித சோதனை முடியும் தருவாயில் உள்ளது.
அதேபோன்று லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோஷூல்ட் தடுப்பூசி சோதனையும் இந்தியாவில் இரண்டாம் கட்ட சோதனை முடியும் தருவாயில் உள்ளது. அனைத்து மருத்துவ ஆராய்ச்சிகளும் முடிய அடுத்த ஆண்டு முதல் பாதி வரை ஆகும் என்று மருத்துவர்கள் எதிர்பார்கின்றனர்.இவை ஒருபுறம் இருந்தாலும் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைவாக தெரிந்தாலும், ஆபத்து குறையவில்லை என்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.
ஒவ்வொரு நாள் மாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் புதிய கொரோனா தொற்று மற்றும் பரிசோதனைகளின் எண்ணிக்கை வெளியாகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா சென்னையின் தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ளது.
கொரோனா பரிசோதனை ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் சி.டி.ஸ்கேன் என இரண்டு வழிகளில் உறுதி செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தினமும் வெளியிடப்படும் எண்கள் ஆர்.டி.பி.சி.ஆர் எனப்படும் ஆய்வக பரிசோதனை விபரங்களே ஆகும். ஆய்வக பரிசோதனையில் நோய் இல்லை என காட்டினாலும், சி.டி.ஸ்கேன் மூலம் நோய் தாக்குதல் அறியவரும் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 701 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இதில் 330 பேருக்கு மட்டுமே பி சி ஆர் பாசிடிவ் முடிவு வந்துள்ளது. 371 பேருக்கு பி சி ஆர் நெகடிவ் என வந்துள்ளது. ஆனால் கொரோனாவுக்கான அனைத்து அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் இருப்பதால் அவர்களும் கொரோனா நோயாளிகளே என்றும் கொரோனாவுக்கான சிகிச்சையே அவர்களுக்கும் வழங்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த நான்கு நாட்களாக பிசிஆர் பாசிடிவ் கொரோனா நோயாளிகளை விட நெகடிவ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கொரோனா சிகிச்சைப் பொறுப்பு மருத்துவர் ராகவேந்தர் தெரிவிக்கையில், ஒரு நாளில் செய்யப்படும் மொத்த பரிசோதனைகளில், நூற்றில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று தெரியவருகிறது என்பதைத்தான் தொற்று விகிதமாக குறிப்பிடுகிறோம்.சென்னையில் கடந்த சில நாட்களில் தொற்று விகிதம் குறைந்து வருகிறது. அக்டோபர் மாதம் 2ம் தேதி அதிகபட்சமாக 10.44% ஆக தொற்று விகிதம் இருந்தது. அதன் பின் தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என கூறியுள்ளார்.
பிசிஆர் பாசிடிவ் தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் தொற்று விகிதம் குறைந்து வந்தாலும், பி சி ஆர் நெகடிவ் என வந்து கொரோனா சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை முழுவதும் தெரிய வந்தால் தான் கொரோனா நோய் பரவல் உண்மையில் எவ்வளவு உள்ளது என தெரிந்து கொள்ள முடியும் என மருத்துவர் அமலோற்பாவநாதன் கூறுகிறார்.