கோயம்பேடு சந்தையில் வேலை செய்தவர்கள் மூலம் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
கோயம்பேட்டில்இருந்து காய்கறி லாரி மூலம் சொந்த ஊரான கடலூர் மாவட்டத்திற்கு சென்ற இருவருக்கு தொற்றுஇருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டது. அவர்களுடன் சென்ற 105 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.அவர்களில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் வியாபாரம் செய்தவர்கள், கூலித் தொழிலாளர்கள் என கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் 427 பேர் திரும்பியது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள், தங்களது சுய விவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டார்.
இதேபோல், கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் திரும்பிய 19 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் சிறுகளத்தூர், வஞ்சினபுரம், இடையத்தான்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய திருச்சி கூலி தொழிலாளிகள் 4 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வசிக்கும் தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்கெட்டில் இருந்து சொந்த ஊர்க்கு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 11 கிராமங்களை சேர்ந்த 83 பேரை சோதனை செய்ததில் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இவர்கள் அனைவரும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த 11 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த இளைஞருக்கு தொற்று உறுதியான நிலையில், அவரது தாய் மற்றும் அருகில் உள்ள கல்லூரி மாணவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து காய்கறி, பழம் வாங்கி வடபழனி காய்கறி சந்தையில் விற்று வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவரின் கடைக்கு வந்து சென்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், சென்னை திருவான்மியூர் மார்க்கெட்டில் 63 வயதான வியாபாரி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடையார் இந்திரா நகரைச் சேர்ந்த இவர், கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி திருவான்மியூரில் விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், மார்க்கெட்டுக்கு வந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான மா.சுப்ரமணியன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷுக்கு எழுதியுள்ள கடிதத்தில்…
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை மாநகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள இடர்மிகு இந்நேரத்தில் எமக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை இனியாவது சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
கொரோனா தொற்று தேசிய பேரிடராக மத்திய அரசு மார்ச் 14 ஆம் தேதி அறிவித்ததை தொடர்ந்து, மார்ச் 17 ஆம் தேதி முதல் தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
மார்ச் 22 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உள்ளது. “கொரோனா பாதிப்பின் மையமானது கோயம்பேடு” என்பது தலைப்புச் செய்தி ஆகியுள்ளது. இதுவரை 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 15,000 கூலித் தொழிலாளர்களும், தினந்தோறும் லட்சக்கணக்கானோரும் ஒன்றுகூடும் “கோயம்பேடு சந்தையை” சென்னை மாநகராட்சி கணக்கில் எடுத்து தடுப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கடந்த நான்கு நாட்களாக அரசு நிர்வாகங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும் “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்“ என்பதை போல் தானே?
திரு.வி.க. நகர்,இராயபுரம் மண்டலங்களில் உள்ள 30 வட்டங்கள், கோயம்பேடு வட்டம் ஆகியவற்றை மிக ஆபத்தானவட்டங்களாக அறிவித்து நாம் கடந்த பேரிடர் காலங்களில் செய்ததை போல, அந்த வட்டங்களுக்கும்மற்ற மண்டலங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை Nodal Officer-களாகநியமிக்காதது ஏன்? காரணம், இந்த வட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, சில மாநிலங்களில்பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. (உதாரணத்திற்கு வார்டு எண்77-ல் மட்டும் 149 பேர்) அப்படி நியமித்தால் தொற்று பரவுதலை அனைத்து வகையிலும் அதிகாரம்படைத்தஅவர்களால் தடுக்க முடியுமே? அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளநிவாரண உதவிகள் வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது.
போதுமான விழிப்புணர்வு இல்லாததால் சென்னையில் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளாளர்கள் வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள்தானே? அப்படிப்பட்டவர்கள் பெரும்பகுதியாக வசிக்கின்ற வடசென்னையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் சிக்கல் இருப்பதை தாங்கள் உணராதவரா என்ன?
“மூன்று நாட்களில் கொரோனா பூஜ்யமாகும்“; “இந்த வைரஸ் பணக்காரர்களை மட்டுமே தாக்கும். ஏழைகளை தாக்காது” என்று சொன்ன தமிழக முதல்வரின் ஞான கணிப்பையும் மீறி, கோயம்பேட்டில் கொத்தமல்லி விற்றவரும், வாங்கியவருமாக சேர்த்து சென்னையின் பாதிப்பு எண்ணிக்கை 1200-ஐ தாண்டி போகிறது. இந்த நேரத்தில் சென்னையில் மிக ஆபத்தான வட்டங்களில் இராணுவம், அவர்களின் மருத்துவத் துறையை பயன்படுத்த யோசிக்கலாம் அல்லவா? 98 சதவீதம் பேருக்கு எவ்விதமான அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சொன்ன தாங்கள், அத்தகையவர்களை தனி விடுதிகளில் வைத்து கண்காணிப்பதுதானே சரியாக இருக்கும்?
அன்புகூர்ந்து இவைகளைக் குற்றச்சாட்டுகளாக கருதிடாமல், ஆலோசனைகளாக ஏற்று மாநகர மக்களை காக்க கவனம் செலுத்திடுமாறு வேண்டுகிறேன் என்று மா.சுப்பிரமணியன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
–விஜயகுமார்