திருப்பூர் மாவட்ட நகர
ஊரமைப்பு அலுவலகம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா?
கோபத்தின் உச்சத்தில் பொதுமக்கள்…!
திருப்பூரில் செயல்பட்டுவரும் மாவட்ட நகர ஊரமைப்பு துறை அலுவலகம் டவுண்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இணை இயக்குநர் அந்தஸ்தில் முருகன் என்பவரும், அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்ட பிறகு தற்போது இந்த அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தின் முக்கிய பணிகள் உத்தேச குடியிருப்பு மனைப்பிரிவுகளுக்கும், அனுமதியற்ற மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து பின்னர் கள ஆய்வு மேற்கொண்டு தொழில் நுட்ப அனுமதி வழங்குவதுதான்.
இவ்வாறு பெற்ற வீட்டுமனைகள் வரன்முறைபடுத்தப்பட்ட பின்னர்தான் வீடு கட்டவோ, கடன்பெறவோ அல்லது விற்க்கவோ முடியும். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு முன்பு வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு சில மனைகள் விற்கப்பட்டு விற்கப்படாமல் உரிமையாளர்கள் பெயரில் உள்ள அனுமதியற்ற மனை பிரிவுகள் அனுமதி வேண்டி திருப்பூர் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் சுமார் 3000 விண்ணப்பங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக இந்த அலுவலகத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருப்பவர் கூறும்போது, நகர ஊரமைப்பு அலுவலகத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவிற்கு அனுமதி வேண்டி கடந்த ஓராண்டிற்கு முன்னரே விண்ணப்பித்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என கூறிய அவர் மேலும் கூறுகையில் பழங்கால கட்டிடங்களை பாதுகாக்கும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் நாங்கள் கொடுத்த கோப்புக்கள் காட்சிப்படுத்தபடுகிறதா? என சந்தேகம் எழுவதாக கூறினார்.
மேலும் இந்த அலுவலகத்தின் இணை இயக்குநர் முருகன் மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான் காட்சி தருகிறார். அதுவும் சில மணி நேரமே கோப்புகளை பார்த்துவிட்டு கள ஆய்விற்கு சென்றுவிடுவது அதிர்ச்சியை அளிக்கிறது.
மேலும் இயக்குநரின் உத்தரவின்றி இந்த அலுவலகத்தில் எந்த ஒரு அணுவும் அசையாது, ஆயிரக்கணக்கான கோப்புக்கள் தேங்கி வழிவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டாலும், சில கோப்புகள் மட்டும் சில நாட்களிலேயே அதே அலுவலக அதிகாரியை அணுகினால் அனுமதி கிடைத்துவிடுவது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. அந்த அதிகாரி குறித்த விரிவான செய்திகளுடன் அடுத்த இதழில்.
என்னதான் நீதிமன்றத்தில் மனை பிரிவுகளை முறை படுத்தகோரி வழக்கு தொடர்ந்து சட்டத்தை இயற்றி மக்கள் அதனை பின்பற்றி நடக்க எண்ணினாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பில்லாமல் எதுவும் நடக்காது என்பதை காட்டுகிறது.
நிரந்தரமான தீர்வென்பது நிரந்தர இயக்குநரை நியமிப்பது ஒன்றே தீர்வாகும். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் திருப்பூர் நகர ஊரமைப்பு அலுவலகத்தின் கோப்புக்கள் காட்சிபடுத்தப்படுகிறதோ? என்கிற அச்சத்தை அரசு போக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.