டாஸ்மாக் கடைக்கு பொது மக்கள் எதிர்ப்பு.. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆத்துமேட்டுப் பகுதியில் இரண்டு தலைமுறைகளாக 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மதுபானக்கடை திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுக்கடை அமைய உள்ள இடம் விவசாய பூமியாக உள்ளதாகவும் அங்கு மதுக்கடை அமையும் பட்சத்தில் இப்பகுதியிலுள்ள அனைத்து குடும்பங்களின் அன்றாட வாழ்வும் கேள்விக்குறியாக மாறுவதோடு, குற்றச் செயல்கள் பெருமளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் மதுக்கடை அமைய உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கூறி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகளும் பொது மக்களும் முற்றுகையிட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்த கோரிக்கை மனுவையும் அளித்தனர்.