தமிழகம்

கிராமசபை கூட்டங்கள் : தமிழகம் முழுவதும் ரத்து!

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவின்படி சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். அது தவிர, சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தியன்றும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமசபை கூட்டத்தை நடத்துவார்கள்.

இந்த கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகம், செலவுகள், பொது மக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும். பொதுமக்கள் எழுப்பும் கோரிக்கைகள் கிராம சபை கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நிறைவேற்றப்படும். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அண்மையில் நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கிறது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். காந்தி ஜெயந்தி நாளன்று உரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கூட்டங்களின் போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற திமுக மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

மத்திய பாஜ அரசு கொண்டு வந்து, அதிமுக ஆதரித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், கட்சி பேரம் பாராமல் தங்களது கிராமசபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், கொரோனா காரணமாக காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் ஊராட்சி கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக, கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படாது என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரம் கிராமத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரட்டூர், அகரவேல், நடுகுத்து வயல் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். அவர்களின் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி திமுகவினர் கிராம சபை கூட்டங்களை நடத்தினர்.

கிராமசபை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கொரோனாவை விட திமுகவை பார்த்துதான் முதல்வருக்கு பயம். அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன கெடுதல்கள், பிரச்சினைகள், விவசாயிகள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் ஸ்டாலின் விளக்கினார்.

விவசாய நலனையும், வேளாண் நலனையும் மனதில் கொண்டு இன்றைக்குக் கிராமப்புறங்களின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண் துறையைக் காப்பாற்ற இந்தக் கூட்டம் நடைபெறுவதாக சுட்டிக் காட்டிய ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்த கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், பச்சாயத்து தலைவர் உள்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராம கோபாலன் கொரோனாவால் உயிரிழந்தது பாஜக உள்பட இந்து அமைப்புகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மறைந்த தலைவர் ராம கோபாலனலுக்கு மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாகக் கோவையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராம கோபாலனுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவுக்குப் பின், வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் கட்சித் தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது வானதி கூறியதாவது:
கிராம சபைக் கூட்டம் ரத்து செய்தது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. கிராம மக்களின் உரிமைக்கான கூட்டமாகக் காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்படும்.

இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்தால் நிச்சயம் வேளாண் சட்டம் தொடர்பாக ஒரு விவாதத்தை முன்னெடுக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். குறைந்தபட்சம் கொரணா தொற்று அதிகளவில் இல்லாத கிராமங்களிலாவது, இந்த கிராமசபைக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சாகுல்ஹமீது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button