கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனை
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் டி.ஆர் பிரபாகரன் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் தனது (கணேஷின்) தந்தை குமாரை அனுமதித்து வெவ்வேறு தேதிகளில் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில் உரிய சிகிச்சை வழங்காததால் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி இறந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்..
அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்ததோடு உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் மீண்டும் ரூ.2,44,000 கட்ட வேண்டுமென நிர்பந்தப்படுத்தி, மொத்தமாக 10 நாளைக்கு 7,02,562 ரூபாய் வசூலித்துள்ளதாக புகார் கூறியுள்ளார்.
இது தவிர தன் தந்தையின் மருத்துவ செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற, காப்பீட்டு நிறுவனத்தில் கோர ஏதுவாக மருத்துவ விவரங்களை கேட்ட நிலையில், தனது தந்தையின் மருத்துவ விபரங்களுக்கு பதிலாக வேறு ஒருவரின் சிகிச்சை விவரங்களை வழங்கியதாகவும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்ட போது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துக்கு மனு அளித்த நிலையில், அந்த மனு மீது விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியருக்கு ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்தும் இதுவரை முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்த தொகையை திரும்ப தரக் கோரியும், மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவுடன் கைகோர்த்து பரவும் டெங்கு –
எலிகளால் பரவ கூடிய எலிக்காய்ச்சல், கொசுவால் பரவக்கூடிய டெங்கு போன்ற நோய்கள் மற்றும் தண்ணீர் சுத்தம் இன்மையால் பரவ கூடிய நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதனை தடுக்க தமிழக சுகதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
காய்ச்சல், டெங்கு அறிகுறிகளுடன் வருவோருக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாக கட்டிடங்களில் தேவையில்லாத பொருட்கள் சேர்வதையும் தண்ணீர் தேங்கி இருப்பதையும் சுத்தம் செய்ய வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் குடிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும், டெங்கு கொசு உற்பத்தி இருக்கும் இடங்களை உடனே கண்டறிந்து அந்த பகுதி மற்றும் சுற்றியுள்ள இடங்களை உடனே கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்ய வேண்டும் என பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்களும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
காய்ச்சிய தண்ணீரை குடித்தல், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், குடிநீர் தண்ணீர் தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒரு முறை சுத்தம் செய்தல் போன்றவையுடன் முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தற்காப்பு சுத்த முறைகளை தொடர்ந்து வந்தால் பருவகால தொற்று மற்றும் கொரோனா நோயிலிருந்து தற்காத்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கொரோனா தாக்கத்தால் வீழ்ந்த தமிழக சுற்றுலாத்துறை –
மார்ச் 25ம் தேதி முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மூலமாக, சுற்றுலா துறையில், இந்தியா முழுவதும் சுமார் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர், இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாதுறை மற்றும் அதை சார்ந்த துறைகளான, ஹோட்டல்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கால் டாக்சி, வாகன ஓட்டுனர்கள் போன்ற பலரும் வேலை இழந்துள்ளனர், அல்லது மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளால் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஊரடங்கு தளவுகள் அறிவிக்கப்பட்டாலும், கையில் பணம் இல்லாத நிலையில், கொரோனா அச்சம் போன்ற காரணங்களால், பண்டிகை காலங்களில் கூட, ஹோட்டல்களில் அதிகபட்சமாக 10 சதவிதம் தான் முன்பதிவுகள் வருவதாக தெரிவித்துள்ளனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்த மத்திய அரசு தனியாக புதிய ஊக்குவிப்பு சலுகைகளை கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால், அனைத்து சந்திப்புகளும், இணையதளத்திலேயே நடப்பதால், மக்கள் நகரம் விட்டு நகரத்திற்கு கூட செல்லாத நிலை தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.
சுற்றுலாத்துறையின் இந்த சரிவை சரி செய்ய, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து, விடுபட்டு, பொருளாதார ரீதியில் பழைய நிலைக்கு மக்கள் வரவே, குறைந்தது இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்பதால், சுற்றுலாத்துறை பழைய நிலைக்கு வர 2024ம் ஆண்டு வரை கால அவகாசம் எடுத்து கொள்ளும் என்று ஆய்வு முடிவுகள் வந்திருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– ரபீக்அகமது