இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இந்து மதத் தலைவர்களாலும், கரசேவகர்களாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆர்.எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மதவெறியூட்டப்பட்ட ‘கரசேவகர்’களைத் திரட்டி, பயிற்சியளித்து, பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அந்தக் கொடுங்குற்றச் செயலை நியாயப்படுத்தியே வந்துள்ளன. வருகின்றன.

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி தொடர்பான ‘நிலம்‘ குறித்த தகராறாக முன் வைக்கப்பட்ட உரிமையியல் வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆவண சாட்சியங்களையும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரத்தையும் அலட்சியம் செய்து விட்டு, ’நம்பிக்கையை’ ஆதாரப்படுத்தி அளித்த இறுதித் தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ’கொடுங்குற்றச் செயல்’ என உச்ச நீதிமன்றம் உறுதிபடக் கூறியிருந்தது.

இந்த நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால் உட்பட குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மதவெறி தூண்டுதலால் இழைக்கப்படும் குற்றங்களுக்கு தண்டனை ஏதும் இல்லை என்றால், குற்றச் செயல்களில் இனி பலரும் எந்த அச்சமுமின்றி ஈடுபடுவார்கள். இது, ‘விபரீத விளைவுகளுக்கு’ பச்சைக் கொடி காட்டுவதாகவே அமைந்துள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்றச் சம்பவங்களை நொடிக்கு, நொடி இடைவிடாமல் மின்னணு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன. அச்சு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தொகுக்கப்பட்ட ஆவணங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வாளர்கள் விரிவாக கள ஆய்வு செய்து, அசைக்க முடியாத ஆதாரங்களோடு குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் அடையாளங்காட்டியுள்ளனர். இவைகள் எதனையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.

அரசியலமைப்பு அதிகாரம் பெற்றுள்ள மத்திய புலானாய்வு அமைப்பு ஆளும் வர்க்கத்தின் முகமையாகவும், அதிகார மையத்தின் எடுபிடிகளாகவும் மாறி வருவதை, சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக மத்திய அரசின் பாசிசத் தன்மை வாய்ந்த அணுகுமுறை, அரசியலைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளின் மீதான தாக்குதல் வளர்ந்திருப்பதை நீதிமன்றத் தீர்ப்புகள் உணர்த்துகின்றன.
பாபர் மசூதி இடிப்பு சமூக விரோதிகளால் நடத்தப்பட்டது எனில் அந்த சமூக விரோதிகள் யார்? அடையாளம் காட்ட வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்கச் செல்லவில்லை; அங்கிருந்த ‘குழந்தை ராமரை’ பாதுகாக்கப் போனதாக கூறியிருப்பது ‘குரூர வன்மம்‘ நிறைந்தது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு, மதவெறி வன்முறை கும்பல்களின் கலவரங்களை அதிகப்படுத்தும் என பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமாவளவன் எம்.பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இதற்கு சிபிஐ இந்த வழக்கை உரிய ஈடுபாட்டுடன் நடத்தவில்லை என்பதே காரணம். எனவே, மத்திய அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம் என்பதை உறுதி செய்திருந்தது. எனவே, அந்தக் குற்றத்தை இழைத்த குற்றவாளிகள் அதற்காக சதித் திட்டத்தைத் தீட்டியவர்கள் அனைவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. தங்களுக்கு எதிரானது என்று கருதினாலும்கூட, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய தரப்பினரும் பாபர் மசூதி இடித்த வழக்கில் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால், அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மாறாக இந்தத் தீர்ப்பு அமைந்திருப்பது அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது.

இந்த வழக்கில் சதி திட்டம் எதுவும் இல்லையென அலகாபாத் உயர்நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்தபோது, அதற்கு எதிராக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இதில் சதித்திட்டம் இருக்கிறது. எனவே, சிறப்பு நீதிமன்றம் அதை விசாரிக்கவேண்டும் என 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆணையிட்டது. அதுமட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ரேபரேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வழக்கையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தேவையற்ற காலதாமத்தைச் செய்துகொண்டிருந்த சிறப்பு நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம்தான் அவ்வப்போது உசுப்பி வழக்கை விரைவுபடுத்திக் கொண்டிருந்தது. அப்படி உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தும் கூட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இப்படியொரு அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

சிபிஐ என்பது சுதந்திரமாக இயங்குகிற ஒரு புலனாய்வு அமைப்பு அல்ல; அது மத்திய அரசின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக இந்த வழக்கில் சிபிஐ நடந்து கொண்டிருக்கிறது.1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் இருந்து கரசேவகர்கள் அயோத்தியில் கூட வேண்டும்; அங்கே இருக்கின்ற பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக செங்கற்களை எடுத்து வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு அன்றைய பாஜக தலைவர் எல். கே. அத்வானி ஆதரவு திரட்டியதை அனைவரும் அறிவோம்.

அதுபோலவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே பாபர் மசூதியை இடிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தார்கள் என்பதற்கு ஊடகங்களிலேயே ஏராளமான மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பத்தக்கனவாக இல்லை என சிறப்பு நீதிமன்றம் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடுவார்கள். அது நாட்டின் நல்லிணக்கமான சூழலுக்குப் பேராபத்தாக மாறிவிடும். எனவே, இதை உணர்ந்து மத்திய அரசு இவ்வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

வேலுமணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button