ரஜினி படத்துடன் மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர்! : கொரோனா சிகிச்சை பணியில் இருந்து நீக்கம் ஏன்?
கொரோனா நோய் தொற்று சென்னையில் அதிகரித்து வந்ததால் ஆங்காங்கே கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில், சென்னை சாலிகிராமம் ஜவகர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று சித்த மருத்துவர் வீரபாபு இந்த சிகிச்சை மையத்தை அமைத்தார். இந்த சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் விரைவாக குணமடைவதாக சொல்லப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் டாக்டர். வீரபாகுவின் தலைமையில் செயல்படும் இந்த மையத்தில் சிகிச்சை எடுப்பது பாதுகாப்பானதாக கருதினர்.
கஷாயம் மற்றும் மூலிகை உணவுகளோடு யோகா, விளையாட்டு என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. அரசு அதிகாரிகள் முதல் சாமானிய மக்கள் வரை மொத்தம் 5400பேர் சிகிச்சை பெற்று 5200 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 200பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு வந்த ஒருவர் கூட இறக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. மேலும், இங்கு அளிக்கும் சிகிச்சைகள் குறித்தும் அவ்வப்போது மீடியாக்களை சந்தித்து வீரபாகு விளக்கி வந்தார்.
இதனால் சித்த மருத்துவ முகாம் பெரும் கவனம் பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து சித்த மருத்துவர் வீரபாபுவை பாராட்டி பேசினார். இந்த நிலையில், வீரபாபு கொரோனா சிகிச்சையளிக்க நோயாளிகளிடத்தில் பணம் வாங்குவதாக வீரபாபு மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சிகிச்சை எடுப்பவர்களுக்கு உணவும் கபசரகுடிநீர் மட்டுமே அவர் வழங்கி வந்துள்ளதாகவும் புகார் சொல்லப்பட்டது. தனியார் ஸ்கேனிங் மையங்களுடன் தொடர்பு வைத்து கொண்டு நோயாளிகளை அங்கு அனுப்பி பரிசோதனைக்கு 6,000 வரை அதிக கட்டணம் கொடுக்க வைத்துள்ளார். வீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கும் மருத்துக்காக கட்டணங்களை வசூலீத்ததாகவும் நோயாளிகளுக்கு தினமும் கொடுக்கப்பட்ட மருந்துகள், உணவுகள் குறித்த எந்த கணக்கையும் அவர் பராமரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
வீரபாபுவின் நடவடிக்கைகள் குறித்த தமிழக அரசுக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் அவரிடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கொரோனா சிகிச்சை மைய பணியிலிருந்து நீக்கினர். தற்போது இந்த சிகிச்சை மையத்தில் 200 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தின் பொறுப்பு வேறு டாக்டர்களிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த வீரபாபு, தான் கொரோனா சிகிச்சையிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியான இரு நாள்களிலேயே வீரபாபு புதிய மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார். சாலிகிராமத்தில் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் உழைப்பாளி மருத்துவமனையை துவங்குகிறார். இங்கு கட்டணமாக 10 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது.
உடல் சோர்வு காரணமாக சிகிச்சையளிக்கவில்லை என்று கூறிய சித்த மருத்துவர், புதிய மருத்துவமனை தொடங்கியுள்ளதால் அவர் விலகியதற்கு வேறு காரணங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. தமிழக அரசு இவருக்கு அழுத்தம் அளித்ததா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழக அரசை எதிர்கொள்ள மருத்துவர் வீரபாபு ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்துகிறாரோ என்றும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
– ரபீக்அஹமது