குற்றமற்றவர் மீது கொடூரமான போலீஸாரின் விசாரணை! : மாநில மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு!
விசாரணை என்ற பெயரில் குற்றச் சம்பவத்துக்குத் தொடர்பு இல்லாதவர்களைக் கொடுமை செய்வது போலீஸாரின் விசாரணை முறைகளில் ஒன்று. அதனை கண்டிக்கும் வகையில், சென்னையில் பெண் கொலை வழக்கு தொடர்பான விசாரணையின்போது பெண்ணின் கணவரையும், மகனையும் தாக்கிய போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை போரூர் அருகே உள்ள கிருகம்பாக்கம், பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் ரவி. இவரின் மனைவி அம்பிகா. 24.1.2012 அன்று அதிகாலை 2 மணியளவில், போலீஸ் சீருடையில் வந்த இருவரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் அம்பிகா. இதுதொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் அழகு, இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஆகியோர் விசாரணை செய்தனர். விசாரணையின் ஒரு கட்டத்தில் அம்பிகாவின் கணவர் ரவி மற்றும் அவரின் மகன் ஆகியோரை போலீஸார் அடித்துத் துன்புறுத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட ரவி, போலீஸாருக்கு எதிராக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பில், ‘சம்பந்தப்பட்ட போலீஸார் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்த போலீஸார் அனைவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’ என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரவி கூறும்போது, “என் மனைவி கொலை வழக்கு தொடர்பாக மாங்காடு போலீஸார் என்னிடமும் என் மகன் ஸ்ரீபாக்யனிடமும் விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, அம்பிகாவை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும்படி அடித்தனர். என் மகனையும் மிகக் கேவலமாக நடத்தினர். நான் சொன்ன எதையும் போலீஸார் கேட்கவில்லை. என்னை 15 நாள்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்திருந்தனர். அப்போது ஸ்ரீபாக்யன், பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தான். தேர்வு நேரம் என்பதால் அவனை விட்டுவிட்டனர். என் வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்த பிறகுதான் என்னை விடுவித்தனர். இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தேன். அதை வாபஸ் பெறக்கூறி போலீஸ் தரப்பிலிருந்து சிலர் பேசினர். நான் மறுத்துவிட்டேன். போலீஸார், எங்களைத் தாக்கிய வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. இந்தத் தீர்ப்பில் எங்களுக்கு ஓரளவு நியாயம் கிடைத்துள்ளது. ஆனால், அம்பிகா கொலை வழக்கில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அந்த வழக்கு விசாரணை கிடப்பிலேயே கிடக்கிறது” என்றார் கண்ணீருடன்.
ஸ்ரீபாக்யன் கூறுகையில், அம்மா கொலை வழக்கில் என்னையும் அப்பாவையும் போலீஸார் விசாரித்த விதம் அநாகரிகமானது. தேவையில்லாமல் எங்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து, அடித்துத் துன்புறுத்தினர். போலீஸை எதிர்த்து நாங்கள் கடுமையாகப் போராடியதற்கு நீதி கிடைத்துள்ளது” என்றார்.ரவியின் வழக்கறிஞர்கள் ஜான்பிரிட்டோ, பூவலிங்கம் ஆகியோர் கூறுகையில்,
அம்பிகா மூலம் மத்தியக் கூட்டுறவு வங்கியில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் கடன் பெற்றனர். அந்தத் தொகையைச் சிலர் குழு உறுப்பினர்களுக்குத் தரவில்லை. கடன்தொகை திரும்பச் செலுத்தப்படவும் இல்லை. இந்தப் பிரச்னையை மூடிமறைக்க முறைகேடு நடந்துள்ளது. அந்த ஆவணங்களை எரித்ததாகவும் தகவல் வெளியானது. இதில் நடைபெற்ற முறைகேட்டை அம்பிகா வெளியில் கொண்டுவர முயற்சி செய்தார். அம்பிகா உயிருடன் இருந்தால் சிக்கிக்கொள்வோம் எனக் கருதிய மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்களை அனுப்பி, அவரைக் கொலை செய்துள்ளனர். மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் போலீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால், இந்தக் கொலை வழக்கை போலீஸார் கிடப்பில் போட்டுவிட்டனர்” என்றனர்.
மாங்காடு போலீஸார் கூறுகையில், அம்பிகா கொலை வழக்கில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம். வழக்கு நிலுவையில் இருப்பதால் வேறு எதுவும் சொல்ல முடியாது” என்றனர்.இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் கூறும்போது
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு நிலுவையில் இருக்கும்போதே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை சட்டரீதியாகச் சந்திக்கவுள்ளேன்” என்றார்.