புகார் கொடுத்தவர் மீது.. குடிபோதையில் காரை ஏற்றி கொலை செய்த பேரூராட்சி தலைவர் !

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட சாமலாபுரம் பேரூராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் விநாயகா பழனிச்சாமி. பல்வேறு புகார்களுக்கு உள்ளான பழனிச்சாமி தற்போது தன்னை எதிர்த்து புகார் மனு அளித்தவர் மீது ஜீப்பை ஏற்றி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதன்கிழமை மாலை அன்னூர் சாலையில் காரணம்பேட்டையில் இருந்து சோமனூர் செல்லும் வழியில் கருகம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பழனிச்சாமி என்பவர் மீது, சாலையில் சென்ற பொலிரோ ஜீப் திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறிய பழனிச்சாமி மீது மனிதாபிமானமே இல்லாமல் ஜிப்பை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சம்பவம் குறித்து 108 ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பழனிச்சாமியை பரிசோதித்துப் பார்த்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றது சமலாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து விநாயகா பழனிச்சாமியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் விநாயகா பழனிச்சாமி குடிபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இந்நிலையில் ஜீப் மோதி இறந்த பழனிச்சாமிக்கும் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமிக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கருகம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி செலவில் தார் சாலை அமைக்க பேரூராட்சித் தலைவர் முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தி புகார் அளித்து பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி இதுபோன்று விபத்தை ஏற்படுத்தி கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்கு பாளையம் பிரிவு அருகே அப்போதைய கோவை மாநகராட்சி மேயர் செ.ம. வேலுச்சாமி சாலையில் சென்றவர் மீது விபத்து ஏற்படுத்தி விட்டு மனிதாபிமானமே இல்லாமல் நிற்காமல் சென்றதால், மேயர் பதவி பறிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுத்து பதவிப்பறிப்பு மற்றும் அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


