தொண்டு செய்து பழுத்த பழம் என பாவேந்தர் பாரதிதாசனால் புகழப்பெற்ற பகுத்தறிவு பகலவனுக்கு பிறந்தநாள்.
ஈரோட்டில் பெரும் வணிகர் வீட்டு வாரிசாய் பிறந்திருந்தாலும், கோயில் தர்மகர்த்தா முதல் நகராட்சி தலைவர் முதற்கொண்டு பல பதவிகள் தேடி வந்தாலும், எதிலும் ஈடுபாட்டை காட்டியதில்லை பெரியார்.
ராஜாஜியின் மூலமாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உயர்ந்ததுடன், கதர் பிரசாரம், கள்ளுக்கடை மறியல் போன்ற காந்திய கொள்கைகளிலும் கவரப்பட்டார்.
ஆனால், தனது வகுப்புவாரித் தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், அங்கிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
தமிழகத்தில் பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடுவதை பிற்போக்குத்தனமாக பார்க்கும் போக்கிற்கு அடித்தளமிட்டவர் பெரியார். 1929ல் பெரியார் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடுவதற்கு எதிராக தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
அதே சமயம் மாற்று கொள்கைகளை கொண்டவர்களையும் மதிக்கும் பழக்கத்தை கொண்டவர் பெரியார் என்பதற்கு, குன்றக்குடி அடிகளார், மறைமலை அடிகள், ராஜாஜி போன்றவர்கள் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்ததே சான்று.
பெரியாரின் மற்றொறு முக்கியமான கொள்கை பெண் விடுதலை. பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற வழக்கமான ஆண்களின் பார்வையில் இல்லாமல், பெண்கள் ஏன் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகமே அவரது கொள்கை வீரியத்திற்கு சான்றாக இன்றும் விளங்கி வருகிறது.
மொழி, இனம், மதம் என எதன் மீதும் தனக்கு பற்று இல்லை என கூறிய பெரியார்தான், தமிழகத்தில் நடந்த முதல் இந்தி போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களில் ஒருவர்.
இந்தியை தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார், இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை அனைவரும் கற்கவேண்டும் என 1940களிலேயே கோரிக்கை வைத்தவர்.
அரசியலில் ப.ஜீவானந்தம் முதல் அண்ணா வரை எத்தனையோ பேர் தன்னை விட்டு பிரிந்து போனாலும் தனக்கு சரியென தோன்றுவதை மட்டுமே செய்வேன் என்பதில் பிடிவாதமாக இருந்த பெரியார், காலமெல்லாம் எதிர்த்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பச்சை தமிழரான காமராஜர் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்தார்.
பின்பு அண்ணாவுடனான கருத்து வேறுபாடு நீங்கிய பிறகு திமுகவை ஆதரித்த பெரியார், கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து மூடநம்பிக்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை மேற்கொண்டார்.
பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் அண்ணாவின் பிறந்தநாளுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால் சட்டப்பேரவையில் உள்ள அண்ணாவின் படத்திற்கு ஆளும் அதிமுக அரசு மாலை அணிவிக்கவில்லை.
சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்க தமிழக அரசு மறந்துவிட்டதாக துரைமுருகன் ஆதங்கம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். அவருடைய நினைவை போற்றும் வகையில், அவையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்திருக்கலாம்.
மேலும், அண்ணாவின் பெயரில் கட்சி வைத்துள்ள அதிமுக அரசு, இன்று இல்லாவிட்டாலும் நாளை அவைக்கு வரும்போது அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்கவும் என்றும் ஆதங்கத்தோடு கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாவின் படத்திற்கு மாலை போட வேண்டும் என்பது அரசின் எண்ணம் என்றும், ஆனால் தற்போது கொரோனோ காலமாக இருப்பதால், கவனத்துடன் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி வருவதாகவும், எந்தவிதத்திலும் கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தில் அண்ணா படத்தற்கு மாலை அணிவிக்கவில்லை என்று விளக்கமளித்தார்.
மீண்டும் பேசிய துரைமுருகன், மலர்தூவும் நிகழ்வு எல்லாம் மேற்கொள்ளப்படுகிறதே என்றார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், கொரனா வைரஸ் எப்படி வருகிறது? எப்படி போகிறது என தெரிவதில்லை. எனவே, மாலை அணிவிப்பதில் எந்த வித பிரசனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் மாலை அணிவிக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
– ராபர்ட்ராஜ்