திருமண ஆசை கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன்
திருமணத் தகவல் மையங்களில் ஒரே புகைப்படத்தை பல்வேறு பெயர்களில் பதிவு செய்த நபர், திருமண ஆசைகாட்டி பல பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் திருமண தகவல் மையங்களில் தனது ஒரே புகைப்படத்தை வெவ்வேறு பெயர்களை கொண்டு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் படித்த பெண்கள், முதிர் கன்னிகள், கைம்பெண்கள் எனப் பல பெண்களை குறிவைத்து தொடர்பு கொண்டு திருமண ஆசை கூறி பாலியல் ரீதியாகவும், பல கோடி ரூபாய் பணம் பெற்றும் ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து இவர் மீது பல புகார்கள் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அமர்வு விசாரித்தது.
அப்போது உடனடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சக்கரவர்த்தியை கைது செய்யவேண்டும் எனவும் இல்லையெனில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து லால்குடி காவல்துறையினர் சக்கரவர்த்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பரை கைது செய்துள்ளனர்.