ஆபத்தை விளைவிக்கும் கலப்பட தேங்காய் எண்ணெய்
திருப்பூர் மாவட்டம் தொழிற்துறையில் சிறந்த மாவட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது இந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மக்கள் பயன்படுத்தினால் நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து உண்டாகும் சூழ்நிலை இருப்பதாக தொடர்ந்து நமக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. அந்த புகார்கள் குறித்து விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொப்பரைத் தேங்காய்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து தங்கள் நிறுவனத்தில் உடைத்து காய வைக்கின்றனர். காய்ந்தபின் தேங்காயை கொட்டாச்சியில் இருந்து பிரிக்கின்றனர். அதன்பின் தேங்காயின் ஈரப்பதத்தைப் போக்க கேஸ் வெல்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் கார்பெட் கற்களை ஆங்காங்கே குவித்து வைத்து சுற்றிலும் தேங்காய்களை வைத்து காற்று புகாமல் தார்பாய்களையும், பிளக்ஸ் பேனர்களையும் வைத்து சில மணி நேரங்கள் மூடிவைக்கிறார்கள். அதன்பிறகு காலையில் இந்த தார்பாய்களை திறக்கும்போது அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தேங்காய்கள் சாதரணமாக காய்ந்து போனால் லேசான மஞ்சள் கலராகத்தான் நாம் வீடுகளில் பார்த்திருப்போம்.
ஆனால் இந்த தேங்காய்கள் கார்பெட் கற்கள் கலந்ததால் சுத்த வெள்ளையாக காட்சி அளிக்கிறது. காலை நேரங்களில் இந்த தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகள் முழுவதும் புகை மண்டலங்களாக காட்சியளிப்பதால் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதை சுவாசிக்கும் மக்கள் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளால் அவதிப்படுகிறார்கள். இதனால் காங்கேயம் பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேங்காயின் நிறத்தை மாற்றுவதற்காக இரசாயனம் பயன்படுத்தப்பட்டு சுத்தமான தேங்காய் எண்ணெய் என்று சந்தையில் பல்வேறு பிராண்ட்கள் பெயர்களில் விற்பனை செய்கிறார்கள். இந்த தேங்காய் எண்ணெய்களை மக்கள் பயன்படுத்தினால் இளநரை, சொரியாசிஸ், தலைமுடி கொட்டுதல், அலர்ஜி போன்ற பல்வேறு நோய்கள் உருவாகும் என்பது தெரிந்தும் அப்பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
பெரிய நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்யப்படும் எண்ணெய்கள் தான் இரசாயனம் கலந்து விற்கப்படுகிறது. இதனால் இப்போது இயற்கையாக தயாரிக்கப்படும் மரச்செக்கு எண்ணெயின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கு எண்ணெய் போன்ற தோற்றத்தை உருவாக்க சில ரசாயனங்களைக் கலந்து இதுதான் உண்மையான மரச்செக்கு எண்ணெய் என்று தெருக்களிலும், நெடுஞ்சாலைகளிலும் மிகப்பெரிய பேனர்களை வைத்து மக்களை ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோல் ஆட்டுக்கொழுப்புகளை சுத்தப்படுத்தி சில இரசாயனத் திரவியங்களை கலந்து உருக்கி நெய்யில் கலப்படம் செய்து சுத்தமான நெய் என்று விளம்பரம் செய்து விற்பனை செய்கிறார்கள். அன்றாட மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்வது அனைத்து அதிகாரிகளுக்கும் நன்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சூலூர் பகுதிகளில் ஆடு மாடுகளின் எலும்புகளை அரைத்து சிறுவர்களின் வளர்ச்சிக்கு அபார சக்தி உள்ள ஊட்டச்சத்து மாவுகளாக விற்பனை செய்கிறார்கள்.
இதுபோன்ற மக்களின் உயிரோடு விளையாடி பணம் சம்பாதிக்கும் கலப்பட செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்றாட பயன்படுத்தும் எண்ணெய்களில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. அரசு அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்தால் அரசு இயந்திரம் சரியாக இயங்கும். இதனை உணர்ந்து அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் அப்பகுதி மக்களோடு நாமும் காத்திருப்போம்.
– சௌந்திரராஜன்