நீட் தேர்வு : மாணவர்கள் தற்கொலை : யார் காரணம்..?
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும், நீட் தேர்வு விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தீர்மானத்தின் மீது திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, “நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிடாமல் திமுக தடுத்தது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இத்தேர்வுக்கு தடை பெற்றதும் திமுகதான். 2016 இல் அதிமுக ஆட்சி வந்த பிறகே நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.
அதிமுக ஆட்சியின் மீதான ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார், இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசியபோது, ” நீட் தேர்வு பிரச்சனைக்கு திமுகதான் காரணம். நீட் தேர்வு யாரால் கொண்டு வரப்பட்டது என அனைவருக்கும் தெரியும்.
2010 இல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் திமுக அங்கம் வகித்து கொண்டிருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து, திமுக வரலாற்று பிழையை செய்தது. எனவே, நீட் தேர்வின் காரணமாக 13 மாணவர்கள் மரணமடைந்ததற்கு திமுகவே காரணம்” என்று முதல்வர் கோபமாக கூறினார்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சட்டப்பேரவையில் கடந்த 2017 இல், ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு சற்றும் கண்டுகொள்ளாமல், அதனை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. திமுகவில் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர், துணை பொதுச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் நடக்கும் இந்த முப்பெரும் விழா அதிக கவனம் பெற்றுள்ளது. செப்டம்பர் 15 – அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 – பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள்.
இந்த மூன்று முக்கியமான நாட்களை கொண்டாடும் வகையில் திமுக சார்பாக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விழா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுகவின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 7 மாதங்களில் திமுக ஆட்சி என நாடே சொல்கிறது. மக்கள் திமுக ஆட்சி வரும் என்று நம்புகிறார்கள். திமுக ஆட்சிதானா? என ஊடகங்கள் விவாதம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை- மக்கள் மனம் அது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சம் என்பதுதான் அதை தடுக்கும் லட்சணமா?.தமிழக அரசு வெளியிட்ட கொரோனா புள்ளி விவரங்களாவது உண்மையா? அதிலும் பொய்கள். கொரோனாவை விட கொடிய ஊழலரசு கோட்டையில் இருக்கிறது- அதை விரட்ட வேண்டாமா?. கொரோனா குறித்து தமிழகம் அடுத்தடுத்து பல பொய்களை சொல்லி வருகிறது. மக்களிடம் அரசு உண்மைகளை மூடி மறைக்கிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 13 மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுதான் காரணம். நீட் மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நீக்கப்படும். மொத்தமாக தமிழகத்தில் 8 மாதத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விற்கு திமுகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டுவதை நிறுத்திவிட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்ற¤ணைந்து நீட் தேர்விற்கு எதிராக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– வரதராஜன்