வறுமைக்கோடு பட்டியலை சரிபார்க்கும் அதிமுகவினர்..! : வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
பழனியில் வறுமைக்கோட்டுக் கீழே உள்ளவர்கள் அடங்கிய பட்டியலை அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் சரி பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதில் எந்த தலையீடும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.
சமீபத்தில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வறுமைக்கோடு பட்டியலை தேடிக்கொண்டும், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டும் மக்கள் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு அலைகிறார்கள்.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சியில் வறுமைக்கோடு பட்டியலை எடுத்துக்கொண்டு மாநகராட்சியிலிருந்து வருவதாக அரசுக்கு சம்பந்தமில்லாத ஆளுங்கட்சியினரின் வேலையாட்களாக சிலர் வார்டு வார்டாக செல்கிறார்கள்.
கிராமப்புறங்களில் பெரும்பாலும் கிராம நிர்வாகஅலுவலகம், ஊராட்சி அலுவலகங்களில் அந்த பகுதியில் உள்ளவர்களின் பி.பி.எல் பட்டியல் இல்லாததால் மக்கள் அலைக்கழிப்புக்குள்ளாகி உள்ளனர். பழனியில் பி.பி.எல். பட்டியல் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
ஆளுங்கட்சி பிரமுகர்கள் தான் பட்டியலை வைத்துக்கொண்டு வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது போல வீடுவீடாக சென்று வருகிறார்கள். ஆளுங்கட்சி பிரமுகர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.