தமிழகம்

இறுதி செமஸ்டர் தேர்வு..! : வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம்…

கொரோனா பொது முடக்கத்தால் சுமார் ஆறு மாதங்களாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் அரசு இதுகுறித்து உறுதியான முடிவெடுக்க முடியாமல் உள்ளது.


9-12 வகுப்பு மாணவ, மாணவிகள் விருப்பத்தின் பேரில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தாலும் தமிழக அரசு இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த அனைவரும் ஆல் பாஸ் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது ஆதரவையும், எதிர்ப்பையும் ஒருசேர பெற்றது.

அண்ணா பல்கலைக்கழகம், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் தேர்வை நடத்த உள்ள நிலையில், தமிழகத்தின் மற்ற பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வை வீட்டில் இருந்தே எழுதி விடைத்தாளை தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று வெளியாகி உள்ள அறிவிப்பு விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

தமிழக கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 21 ந்தேதி முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன. அதன்படி சில பல்கலைக் கழகங்கள் ஒன்றரை மணி நேர கால அளவிற்கும், சில கல்லூரிகள் 3 மணி நேரத்திற்கும் செமஸ்டர் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளன.

அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் முன்னோடியாக சென்னை அண்ணா பல்கலைக் கழகம், பிரத்யேக சாப்ட்வேரைப் பயன்படுத்தி ஆன்லைனில் காமிரா முன்பு மைக் தொடர்புடன் மாணவர்களை அமரவைத்து தேர்வு நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

போட்டித் தேர்வுகள் போல தயாரிக்கப்பட்டுள்ள வினாத்தாளுக்கு ஒரு நேரத்தில் கணினியில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதும் அறையில் ஏதாவது சத்தம் கேட்டால் முதல் எச்சரிக்கை விடப்படும், மாணவர் கணினி திரையை விட்டு அக்கம் பக்கம் பார்த்தால் இரு முறை மதிப்பெண் குறைக்கப்படும். 3-வது முறையும் தொடர்ந்தால் தேர்வு எழுதுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் வகையில் இந்த தேர்வு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள்.

அதே வேளையில் சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்கள் அறிவித்துள்ள ஆன்லைன் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளோ, பெற்றோர்களுக்கு குழப்பத்தையும், மாணவர்களுக்கு குதூகலத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் இருந்தே இந்த தேர்வை எழுதலாம், தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மாணவர்களது வாட்ஸ் அப்பிற்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும், அல்லது பல்கலைக் கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!

தேர்வு எழுதி முடித்ததும் தேர்வுத் தாளை ஸ்கேன் செய்து தேர்வு முடித்த ஒரு மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரத்திற்குள்ளாக பல்கலைக் கழக இணையதள முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதும்!

இணைய வசதி இல்லாத மாணவர்கள் ஸ்பீடு போஸ்ட் மூலம் விடைத்தாள்களை தேர்வு எழுதிய அன்றே அனுப்பி வைக்கலாம் என்றும் சலுகைகளை வாரி வழங்கியுள்ளனர். சில கல்லூரிகள் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை தேர்வு நடத்தும் நிலையில் ஸ்பீட் போஸ்ட்டில் எப்படி அனுப்பி வைப்பார்கள்? மறுநாள் தான் தேர்வுத்தாள்களை அனுப்பி வைக்க இயலும்!

இந்த ஆன்லைன் தேர்வு முறை, புத்தகத்தை திறந்து வைத்து பார்த்து தேர்வு எழுதும் முறைகேட்டிற்கு துணை போகும் என்று கல்வியாளர்களும், முன்னாள் துணைவேந்தர்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, இப்படி ஒரு தேர்வு நடத்துவதற்கு பதிலாக, தேர்வு நடத்தாமலேயே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிவிடலாம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பும், கட்டுப்பாடும் இல்லாத இப்படிப்பட்ட தேர்வு முறையால் வருங்காலத்தில் மாணவர்களின் கல்வித் திறனை அறிந்து கொள்ள இயலாமல் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று சுட்டிக்கட்டுகின்றனர் கல்வியாளர்கள்.

அதே நேரத்தில் இதுபோன்ற தேர்வு முறைகள் உலகின் பல நடுகளிலும் இருப்பதாகவும் , கேள்விக்கு பதிலை புத்தகத்தை பார்த்து எழுத வேண்டும் என்றால் கூட அந்த பதில் புத்தகத்தில் எங்கு உள்ளது என்பது தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? புத்தகத்தை படிக்காமல் இது சாத்தியமில்லை, எனவே இது மற்றொரு தேர்வு முறை என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி.

அண்ணா பல்கலைகழகம் போலவே மற்ற பல்கலைகழகங்களும் தங்களுக்கு என்று தனி மென்பொருளை உருவாக்கி கண்காணிப்புடன் ஆன்லைன் தேர்வை நடத்தினால் திறமையான மாணவர்களை அடையாளம் காண உதவும்..!

பா.வேல்மணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button