முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி : விஜய பிரபாகரன்
சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடுமும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். திமுக நீண்டநாட்களாக தங்களோடு மக்கள் நல பிரச்சனைகளுக்கு போராடும் போது உறுதுணையாக இருந்த கட்சிகளுடன் பேசி தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக சுமூகமாக பேசி முடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையில் அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாததால் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு கட்சிகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை தேமுதிகவிற்கு வழங்க மறுத்ததால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் இந்த கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற போது நமது கட்சியை மதிக்காத அதிமுக, பாமக, பாஜக கூட்டணியில் நாம் பயணிக்க முடியாது. நம்மைவிட பலம் இல்லாத பாமக, பாஜக கட்சியினருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நமது கட்சிக்கு அதிமுக கொடுக்கவில்லை. அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தபோது நமது நிர்வாகிகளை உதாசினப்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி இந்த தேர்தலில் அதிமுகவினரை தோற்கடித்து தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கூறியிருக்கிறார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தோ உங்கள் அனைவரின் விருப்பத்தைக் கேட்டுத்தான் அதிமுகவினரோடு கூட்டணியில் இணைந்தோம். உங்கள் விருப்பத்தின் பேரிலேயே கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று முடிவெடுத்து அறிக்கையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஸ் பத்திரிகையாளர்களிடம் எங்கள் கட்சியை உதாசினப்படுத்திய அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது கே.பி.முனுசாமி பாமகவின் சிலிப்பர் செல்லாக மாறி எங்களை உதாசினப்படுத்தி பேசியதோடு பாமகவின் கொள்கை பரப்புச் செயலாளர் போல் நடந்து கொண்டார். நாங்களும் கூட்டணி தர்மத்திற்காக அதிமுக, பாஜகவின் அநியாயங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்தோம். கூட்டணியிலிருந்து வெளியேறிய இந்த தருணம் எங்கள் கட்சியினருக்கு தீபாவளி என்று சந்தோசமாக கூறினார். தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசும்போது தேமுதிக தலைமை இன்று நல்ல முடிவு எடுத்திருக்கிறது. மற்ற கட்சிகளைப் போல் அடுத்தவர்கள் ஆரம்பித்த கட்சியில் பதவியில் அமர்ந்திருப்பவர் நாம் அல்ல. இது கேப்டன் விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி என்று எடப்பாடியை தாக்கி பேச ஆரம்பித்தார். என்னை வாரிசு அரசியல் என்று கூறுவார்கள். வாரிசு இல்லாதவர்கள் தான் வாரிசு அரசியலைப் பற்றி பேசுவார்கள். கேப்டனின் வாரிசான நான் கேப்டன் உருவாக்கிய கட்சியில் இல்லாமல் மற்ற கட்சிகளுக்குச் செல்ல முடியுமா? ஏதோ தேமுதிக பேரம் பேசும் கட்சி என்கிறார்கள். யாராவது நிரூபிக்க முடியுமா? வருமான வரித்துறையும் சிபிஐயும் வைத்திருக்கும் ஆள்பவர்களால் நிரூபிக்க முடியுமா? ஊழல் செய்து சிறைக்குச் சென்று வந்த உங்கள் தலைவி ஜெயலலிதாவே ஆட்சியில் அமரும்போது மக்களுக்காக உழைக்கும் தேமுதிக ஆட்சியை அமைக்க முடியாதா? தேர்தலில் அதிமுக, பாஜக படுதோல்வியடையப் போவது உறுதி. அதிமுக தலைவி ஜெயலலிதாவைப் போல் முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி.
தேமுதிக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவினருடன் கண்ணியமாக நடந்து கொண்டதற்கு பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டார். அவர் சசிகலாவிற்கு செய்த துரோகத்தைப் போல் நமக்கும் துரோகம் செய்துவிட்டார். அதிமுக, பாமக, பாஜக கூட்டணியை இந்த தேர்தலில் தேமுதிக படுதோல்வியடையச் செய்வோம். முதல்வர் பழனிச்சாமி தேர்தலுக்குப் பிறகு சும்மா பழனிச்சாமி ஆகிவிடுவார்.
தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவின் பத்து சதவீத வாக்குகளை மீண்டும் வாங்கி தேமுதிகவின் பலத்தை நிரூபித்துக் காட்டுவோம். பழனிச்சாமி என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா? பணம் கொடுத்துத் தானே முதல்வரானார். இந்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று பேசினார்.
இவரது பேச்சு கடந்த காலங்களில் விஜயகாந்த் பேசியதைப் போலவே எதார்த்தமாக இருந்ததாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
– குண்டூசி