Uncategorized

30 ஆண்டுகளாக விற்கப்படும் குழந்தைகள் : முறைகேடாக பிறப்பு சான்றிதழ் : அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவரிடம் 11 மணிநேர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓய்வு பெற்ற செவிலியரான அமுதா என்பவர், குழந்தைகள் விற்பனை தொடர்பாக பேரம் பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர்களிடம் காவலதுறை தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் அவர் அண்மையில் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில், ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய் என்றும், பெண் குழந்தை என்றால் ரூ. 3 லட்சம் என்றும், கருப்பு நிறத்தில் குழந்தை என்றால் ஒரு விலை, நிறமான குழந்தை என்றால் தனி விலை எனவும் அவர் பேசும் விதம் கேட்பவர்களை பதைபதைக்கச் செய்தன.


தவிர, 30 ஆண்டுகளாக கடவுளின் ஆசியுடன் எந்த குறையும் இல்லாமல் இந்த தொழில் நடக்கிறது என்று அமுதா அந்த ஆடியோவில் பேசியது மேலும் அதிர்ச்சியை கூட்டியது. இவை அனைத்திற்கும் மேலாக, அரசு அதிகாரிகளிடம் உங்களுக்கு அந்த குழந்தை பிறந்ததாகவே சான்றிதழ் வாக்கித் தருகிறேன். அதற்கு தனியாக ரூ.70 ஆயிரம் தாருங்கள். 70 ஆயிரம் கொடுத்தால் போதும் அரசு அலுவலகத்தில் அந்த குழந்தை உங்களுக்கு பிறந்தது போன்ற அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்குள் நான் பெற்றுத் தருகிறேன் என்று அவர் ஆடியோவில் மேலும் பேசியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. அருளரசு அமுதாவிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், தான் 3 குழந்தைகளை விற்பனை செய்ததை அமுதா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும் அமுதாவிடம் விசாரணை நடைபெற்றது.
சுமார் 11 மணிநேர விசாரணைக்கு பிறகு ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை மாவட்ட எஸ்.பி. அருளரசு கைது செய்துள்ளார். முன்னதாக, அமுதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் ஓமலூரில் சட்ட விதிமுறைப்படி ஒரு குழந்தையை தத்துக் கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தவிர, கொல்லிமலையில் 2 பெண் குழந்தைகளை யாரிடம் அவர் விற்றார் என்பது தொடர்பாகவும் அமுதா மற்றும் ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விரைவில் இதுதொடர்பான விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, அமுதாவிடம் நடத்தப்பட்ட விசாரனையில் தமிழகம் முழுவதும் பலரும் குழந்தைகளை கடத்தி விற்பனையில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் என பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி கடந்த 30 ஆண்டுகளாக பச்சிளங் குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்பது ஆண்டுகளாக நடந்துள்ள குழந்தை வியாபாரம் எப்படி வெளிஉலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டது, குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து எப்படி இவர்களால் பெற முடிந்தது, குழந்தை திருட்டும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இப்படி விற்கப்படும் குழந்தைகளுக்கு ராசிபுரம் நகராட்சி அலுவலகம் மூலம் முறைகேடாக பிறப்புச் சான்றிதழும் வாங்கிக் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளது. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலும் – முறைகேடுகளும் பெருக்கெடுத்து ஓடுவதை நிரூபிக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
எனவே, குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து தீர விசாரிக்க வேண்டும். இவர் நர்சாக பணியாற்றிய காலத்தில் மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், இந்த விற்பனையில் வேறு ஏதேனும் குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோத கும்பல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டும், இதற்கு உடந்தையாக இருந்தவர்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விற்பனை செய்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள், ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button