பகுதி நேர ஆசிரியர்களுக்கு விடிவுகாலம் எப்போது?
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளத்தை வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘’பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 10 கல்வி ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது வேதனை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177ன்படி வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. இதற்காக இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
பகுதி நேரமாக இருந்தாலும் கூட, ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகாவது தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் இந்த பணியில் சேர்ந்தனர். ஆனால், அதன்பின் 9 ஆண்டுகள் முடிந்து 10வது கல்வியாண்டு தொடங்கும் போதிலும் கூட அவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் போராட்டம் நடத்துவதும், அந்த நேரத்தில் இவர்களிடம் பேச்சு நடத்தும் அதிகாரிகள், ‘உங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்கிறோம்‘ என வாக்குறுதி அளிப்பதும் வாடிக்கையாகி விட்டன. ஆனால், பணி நிலைப்பு என்ற இவர்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் மட்டும் தொடுவானத்தைப் போன்று விலகிக் கொண்டே செல்கிறது.
இவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழகஅரசை வலியுறுத்துகிறது.
2014-ம் ஆண்டில் இவர்களின் தொகுப்பூதியத்தை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ. 7 ஆயிரமாக உயர்த்தி ஜெயலலிதா ஆணையிட்டார். அவரது மறைவிற்கு பின்னர் முதல்வரான எடப்பாடி பழனிசாமி ரூ.700ஐ 2017-ம் ஆண்டு உயர்த்தியதால் ரூ.7700 ஆனது. ஆனாலும் கூட பணி நிரந்தரக் கோரிக்கையை பரிசீலிக்கக் கூட அதிமுக அரசு தயாராக இல்லை.
அதுமட்டுமின்றி, இவர்களை பணியமர்த்துவது தொடர்பான இரு அரசாணைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களை நிறைவேற்றுத் தருவதற்கு கூட ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தயாராக இல்லை. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த 177-வது அரசாணைப்படி ஒரு பகுதிநேர ஆசிரியர் வாரத்திற்கு 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதுமானது. இந்த வகையில் ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம்; அதற்கான ஊதியத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியருக்கும் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.30,000 வரை ஊதியம் கிடைக்கும். ஆனால், இதை செயல்படுத்த அதிகாரிகள் தயாராக இல்லை. பின்னர் பிறப்பிக்கப் பட்ட 186-வது அரசாணைப்படி அதிகபட்சமாக இரு பள்ளிகளில் பணியாற்றலாம் என்று விதிகள் திருத்தப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்பையும் தமிழக ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதற்கும் காரணங்கள் இருக்கின்றன. அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு இருப்பதால், பகுதிநேர ஆசிரியர்களை, ஆசிரியர் இல்லாத வகுப்புகளை கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறாக இவர்களை முழுமையாக ஒரே பள்ளியில் பயன்படுத்திக் கொள்வதற்காகவே இவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி தரப்படுவதில்லை.
அது மட்டுமின்றி, ஆண்டுக்கு 12 மாதங்களும் பணி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசாணையில் குறிப்பிடப் பட்டிருந்தாலும், 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மே மாதத்திற்கான ஊதியம் எந்த வழியில் மறுக்கப்படுகிறது என்ற வினாவுக்கு பதிலளிக்க முடியாத நிலை நிலவுகிறது.
வருங்காலத் தூண்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை இனியும் வறுமையில் வாட அனுமதிக்கக் கூடாது. இவர்களில் பலர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், கல்லூரி விரிவுரையாளர்களாகவும் நியமிக்கப்படுவதற்கான தகுதியுடையவர்களாவர்.
எனவே, இவர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் காரணமாக தமிழகஅரசின் உத்தரவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மே மாதம் சம்பளத்தை உடனடியாக தற்போது பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
- ராபர்ட்ராஜ்