தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி விகிதம் 10% கீழ் குறைந்தது
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். உடன் அரசு மருத்துவமனை தலைவர் தேரனி ராஜன் இருந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கோவிட் சஸ்பெக்ட் வார்டுகள் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தும் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் இங்கு அனுமதிக்கப்படுவர். விபத்தில் முகம் சிதைந்த ஆந்திராவைச்சேர்ந்த 8 வயது குழந்தைக்கு சிறப்பான முறையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் விகிதம் 10% கீழ் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வந்துள்ளது. தளர்வுகள் கொடுக்கப்பட்ட பிறகு கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே நிபுணர் குழு தெரிவித்திருந்தது. இரண்டு வாரங்கள் ஆன நிலையில் மேலும் ஒரு வாரம் ஆன பிறகே பாதிப்பின் நிலவரம் குறித்து தெரியும். கொரோனா சிகிச்சைக்காக 1,42,000 படுக்கைகள் தயாராக உள்ளது. உலகத்திலேயே அதிக அளவிலான படுக்கைகளுடன் தயாராக உள்ளது தமிழ்நாடுதான். இதில் 40 ஆயிரம் படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன.
உயிரிழப்புகளை குறைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். தகுதியான உயிரிழந்த மருத்துவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாத 34,260 பேரிடம் அபராதமாக 71,85,275 ரூ வசூல் செய்யப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை முதல் அமைச்சர், அதிகாரிகள் கடைபிடிக்கின்றனர். முதலமைச்சர் களத்திற்கு செல்வது உற்சாகமளிக்கவே என்றும் அவர் தெரிவித்தார்.